KP ASTROLOGY IN TAMIL

KP ஜோதிடம் என்றால் என்ன?

பாரம்பரிய ஜோதிடத்திற்கும் KP ஜோதிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

KP என்பதன் விரிவாக்கம் Krishnamurthy Paththathi ஆகும்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற ஜோதிட மாமேதை K. S. Krishnamurthy ஐயா அவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த KP ஜோதிட முறை ஆகும். பத்ததி என்கிற சமஸ்கிருத சொல்லிற்கு தமிழில் முறை என்பது பொருள்.

ஏற்கனவே பாரம்பரிய ஜோதிட முறை எனும் வேத ஜோதிட முறை (Vedic Astrology) இருந்த போது, K.S. Krishnamurthy ஐயா அவர்கள் ஏன் ஒரு புதிய முறையை உருவாக்க வேண்டும்?

K.S. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் ஜோதிடத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவர் தனது ஆராய்ச்சிகளின் மூலம் பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் துல்லியமாக அல்லாமல் தோராயமாகவும், பொதுவானதாகவும் இருப்பதை உணர்ந்தார்.

ஜோதிடப் பலன்கள் துல்லியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் ஜாதகக் கணிதம் துல்லியமாக இருக்க வேண்டும்.

ஜாதகக் கணிதமே தோராயமானதாக இருந்தால், அதை வைத்து கூறப்படும் ஜோதிடப் பலன்கள் எப்படி துல்லியமாக இருக்கும்? தோராயமாகத்தானே இருக்கும்!

இதை உணர்ந்த K.S. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு முன்னோர்கள் வழியிலேயே சென்று ஏற்கனவே இருந்த ஜாதக கணிதத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து ஜாதக கணிதத்தை மிகவும் துல்லியப்படுத்தி ஜோதிட உலகில் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகம் ஏன் தோராயமானது?

வாருங்கள் பார்க்கலாம்..

ஒரு ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் இருந்த நவகிரகங்களின் நிலைகளே ஆகும். ஜாதகத்தில் கிரக நிலைகள் என்பது ராசிக் கட்டத்தில் குறிப்பிடப்படும்.

ராசிக் கட்டத்தில் ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில், எந்த நட்சத்திரப் பாதத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக அறிய கூடுதலாக நவாம்ச கட்டம் பயன்படுத்தப்படுகிறது.

ராசிக் கட்டம், நவாம்ச கட்டம் இவை இரண்டும் தான் பாரம்பரிய ஜோதிட முறையில் ஒருவரின் ஜாதகமாக கருதப்படுகிறது. இதை எந்த ஒரு பாரம்பரிய ஜோதிடராலும் மறுக்க முடியாது.

ஏனெனில், கையில் எழுதப்படும் ஜாதகங்கள், Computer-ல் கணிக்கப்படும் ஜாதகங்கள் என அனைத்திலும் இந்த இரண்டு கட்டங்களை தான் பிரதானமாக குறிப்பிடுகிறார்கள். இது ஜோதிடர்கள், மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மக்களும் நன்கு அறிந்ததே.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்..

பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் தோராயமானதே என்பதை உதாரண ஜாதகங்களுடன் அடியேன் இப்பொழுது நிரூபித்து காண்பிக்கிறேன்.

ஓர் உண்மையான உதாரணம்: Ramesh & Suresh

07/11/2022 அன்று, திருச்சி மாநகரில் மாலை 07:00 மணிக்கு பிறந்த குழந்தையின் ஜாதகத்தை RAMESH என்கிற பெயரிலும்..

அதே நாளில், அதே திருச்சியில் மாலை 07:13 மணிக்கு பிறந்த குழந்தைக்கான ஜாதகத்தை SURESH என்கிற பெயரிலும் இங்கே கொடுத்துள்ளேன்.

இந்த இரு ஜாதகங்களையும் சற்று உற்று நோக்குமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையான ஜாதக உதாரணம்
Ramesh Horoscope 07:00 PM Trichy, KP Astrology Rasi Navamsa Chart Suresh Horoscope 07:13 PM Trichy, KP Astrology Rasi Navamsa Chart
நகரம்: Trichy தேதி: 07/11/2022 Ramesh: மாலை 07:00 PM Suresh: மாலை 07:13 PM

மேலே உள்ள இரண்டு ஜாதகங்களில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? இல்லை என்பதே பதில். பிறந்த நேரத்தில் சுமார் 13 நிமிடங்கள் வித்தியாசம் இருந்தும் கூட ஜாதகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.

அடியேன் இந்த இரண்டு ஜாதகங்களையும் தேடிப் பிடித்து எடுக்கவில்லை. ஏனெனில், இப்படி வருவது பாரம்பரிய முறையில் அபூர்வமானது அல்ல. வாடிக்கையாக நடக்கும் ஒன்று தான்.

பாரம்பரிய ஜோதிட முறையில்.. பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊர் ஒன்றாக இருக்கும் போது, பிறந்த நேரத்தில் சில நிமிடங்கள் வித்தியாசம் ஏற்பட்டாலும் ஜாதகத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. பிறந்த நேரத்தில் சுமார் 14 நிமிடங்கள் வித்தியாசம் ஏற்பட்டால் தான் ஜாதகத்தில் ஒரு சிறு மாற்றத்தையாவது நாம் காண முடியும்.

இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், பாரம்பரிய ஜோதிட முறையில் சுமார் 13 நிமிட இடைவெளிக்குள் பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் தான் வரும்.

இதற்குப் பின்னால் இருக்கும் சூட்சமத்தை இப்போது விரிவாகப் பார்க்கலாம். ராசி கட்டத்தின் உட்பிரிவே நவாம்ச கட்டம் என்பதால் ராசி கட்டத்தை விட நவாம்ச கட்டம் வேகமாக மாறக் கூடியது ஆகும். ஆக, பாரம்பரிய ஜோதிட முறையில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை நவாம்ச கட்டத்தை வைத்து தான் வேறுபடுத்தி காட்ட முடியும்.

ஜாதகத்தில் நவகிரகங்களை காட்டிலும் வேகமாக நகரக் கூடியது லக்னம் ஆகும். ஆக லக்னம் நவாம்சத்தில் ஒரு குறிப்பிட்ட ராசியில் எவ்வளவு நேரம் சஞ்சாரம் செய்கிறதோ அவ்வளவு நேரம் வரை பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன் கேளுங்கள்.

பாரம்பரிய முறையில்.. ராசிக் கட்டம், நவாம்ச கட்டம் இரண்டும் தான் ஜாதகம். நவாம்ச கட்டம் என்பது ராசிக் கட்டத்தின் உட்பிரிவாக இருப்பதால் நவாம்ச கட்டம் ராசி கட்டத்தை விட வேகமாக மாறக் கூடியது. நவாம்ச கட்டத்தில் நவகிரகங்களை விட லக்னம் வேகமாக நகரக்கூடியது ஆகும்.

ஆக, பாரம்பரிய ஜோதிட முறையை பொருத்த வரையில்.. குறுகிய கால இடைவெளி என்று எடுத்துக் கொண்டால்.. நவாம்சத்தில் லக்னம் ஏற்படுத்தும் மாற்றமே ஒட்டுமொத்த ஜாதகத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும்.

இதை தான் அடியேன், நவாம்சத்தில் லக்னப்புள்ளி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுமோ அவ்வளவு நேரம் வரை ஜாதகத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று கூறியிருந்தேன்.

சரி, இப்போது லக்னத்தின் வேகத்தை பற்றி பார்க்கலாம்.

லக்னம் என்பது..

~24hrராசி மண்டலத்தை முழுவதுமாக கடக்க
~2hrஒரு ராசியை கடக்க (24hr / 12)
~52minஒரு நட்சத்திரத்தை கடக்க
~13minஒரு நட்சத்திர பாதத்தை கடக்க

நவாம்சத்தில் லக்னம் ஒரு குறிப்பிட்ட ராசியில் எவ்வளவு நேரம் இருக்கும்?

லக்னம் என்பது ராசி கட்டத்தில் ஒரு நட்சத்திர பாதத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவே, நவாம்ச கட்டத்தில் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.

லக்னம் ராசி கட்டத்தில் உள்ள ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க சுமார் 13 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்று பார்த்தோம்.

ஆக, நவாம்ச கட்டத்தில் லக்னம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல சுமார் 13 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

இதன்படி பார்க்கும் பொழுது.. பாரம்பரிய ஜோதிட முறையில் நாம் ஜாதகங்களை கணித்தால்..

பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரில் மாற்றம் இல்லாத போது, பிறந்த நேரத்தில் சுமார் 13 நிமிடங்கள் மாற்றம் ஏற்பட்டாலும் ராசி கட்டம், நவாம்ச கட்டம் இரண்டிலும் சின்ன மாற்றம் கூட இருக்காது.

இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்..

பாரம்பரிய ஜோதிட முறையில், ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கு ஒரு முறை தான் நாம் ஜாதகங்களை வேறுபடுத்தி காட்ட முடியும். அது கூட நவாம்ச கட்டத்தில் உள்ள லக்ன நிலையில் தான்.. கிரக நிலைகளில் அல்ல என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, பாரம்பரிய முறைப்படி பார்க்கையில் 13 நிமிட இடைவெளிக்குள் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே ஜாதகம் தான் வரும்.

எதிர்ப்புகளும் பதில்களும்

இதை எப்படி ஏற்றுக் கொள்வது?

இது தான் துல்லியமா?

இரட்டை குழந்தைகள் சுமார் 2 நிமிட இடைவெளியில் பிறக்கின்றதே! பாரம்பரியம் முறையில் அந்த இரு குழந்தைகளின் ஜாதகங்களும் ஒரே மாதிரி தானே இருக்கும். ஒரே மாதிரியான ஜாதகம் என்பதால் அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை அமைவதில்லையே.

இதை பற்றி.. பாரம்பரிய முறையை பின்பற்றும் சில ஜோதிடர்களிடம் கேட்கும் பொழுது..

?

இரட்டை குழந்தைகள் எல்லோருக்கும் பிறப்பதில்லையே என்கிறார்கள். இதை கேட்டு சிரிப்பதா அல்ல அவர்களின் அறியாமையை கண்டு வருத்தப்படுவதா?

பாரம்பரிய முறையில் இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை வேறுபடுத்தி காட்ட முடியாது என்பதை இவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு சில ஜோதிடர்கள்..

?

இரட்டை குழந்தைகளுக்கு ஜாதகங்கள் ஒன்றாக இருந்தாலும், இந்த இரு குழந்தைகள் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் வாழ்க்கை முறை அமையும் என சமாளிக்கிறார்கள்.

ஒருவர் முன் ஜென்மத்தில் பாவம் செய்துள்ளாரா அல்லது புண்ணியம் செய்துள்ளாரா என அவர் ஜாதகத்தில் எப்படி கண்டறிவது? ஜாதகம் ஒரே மாதிரி இருக்கும் போது அது முடியாத காரியம் தானே!

சரி விடுங்கள்.

இரட்டை குழந்தைகள் கூட கொஞ்சம் அரிதாக தான் பிறக்கின்றன என விட்டுவிடலாம். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் சுமார் 5 இடைவெளிக்குள் வெவ்வேறு தாய்மார்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றன.

பாரம்பரிய முறையில் அந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒரே ஜாதகம் தானே வரும். அதனால் பலன்கள் ஒன்றாகி விடுமா??

?

இதை பற்றி கேட்டால்.. ஒரு சில ஜோதிடர்கள் பாரம்பரிய ஜோதிட முறையில் ராசிக் கட்டம், நவாம்ச கட்டம் மட்டுமில்லையே.. தசவர்க்கம் (மொத்தம் 10 வர்க்க சக்கரங்கள்) இருக்கிறதே!

ஹோரை கட்டம் — ராசியை இரண்டாக பிரிப்பது
திரேக்காணம் — ராசியை மூன்றாக பிரிப்பது
சதுர்தாம்ச கட்டம் — ராசியை நான்காக பிரிப்பது
சப்தாம்ச கட்டம் — ராசியை ஏழாக பிரிப்பது
நவாம்ச கட்டம் — ராசியை ஒன்பதாக பிரிப்பது
தசாம்ச கட்டம் — ராசியை பத்தாக பிரிப்பது
துவதசாம்ச கட்டம் — ராசியை பன்னிரண்டாக பிரிப்பது
சோடசாம்ச கட்டம் — ராசியை பதினாறாக பிரிப்பது
திரிம்சாம்ச கட்டம் — ராசியை முப்பதாக பிரிப்பது
சஷ்டியாம்ச கட்டம் — ராசியை அறுபதாக பிரிப்பது

மேலே குறிப்பிட்டுள்ள தசவர்க்க சக்கரங்கள் இருப்பதை அடியேன் நன்கு அறிவேன். குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை வேறுபடுத்தி காட்டும் முயற்சியில் நம் முன்னோர்கள் ராசி கட்டத்தோடு நில்லாமல் இந்த தசவர்க்க சக்கரங்களை உருவாக்கினார்கள்.

ஆனால் இந்த தசவர்க்க சக்கரங்கள் லக்னப்புள்ளி மற்றும் நவகிரக நிலைகளை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும். மற்ற 11 பாவ நிலைகளை இவற்றில் கருத்தில் கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

எனவே இந்த தசவர்க்க சக்கரங்கள் முழுமை பெறாத காரணத்தினால் பலன் சொல்வதற்கு பயன்படாமல் போனது.

மேலும், இந்த தசவர்க்க சக்கரங்கள் அறிவியல் சாராத பயனற்ற ஒன்று என்பதாலேயே இதை பற்றி தெளிவாக எந்த ஒரு நூலும் இதுவரை வெளிவரவில்லை.

தசவர்க்க சக்கரங்களில் நவாம்சத்தை மட்டும் பாரம்பரிய முறை ஜோதிடர்கள் பயன்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் மீதி சக்கரங்கள் எங்கே போனது? ஏன் அவற்றை ஜாதக நோட்டுக்களில் குறிப்பிடுவதில்லை?

இப்போதெல்லாம் Online-ல் நேரடியாகவோ அல்லது Browsing Centre-ல் Computer Software துணையோடு ஜாதகங்களை கணித்து Download செய்கிறோம் அல்லவா? அவற்றில் கூட பாருங்கள் ராசி மற்றும் நவாம்ச கட்டங்கள் மட்டுமே இருக்கும்.

ஆதலால் இந்த தசவர்க்கம் என்பது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழி போல தான்.. ஒன்றுக்கும் உதவாது. இதை பற்றி பேசுவது நமக்கு நேர விரையம் தான்.

இன்னும் சில ஜோதிடர்கள்..

?

மிக குறுகிய கால இடைவெளியில் பிறப்பவர்களுக்கு ராசிக் கட்டம், நவாம்ச கட்டம் ஒன்றாக இருந்தாலும் கூட.. அவர்களின் தசாபுத்தி அட்டவணையில் மாற்றங்கள் இருக்குமே என்று வாதம் செய்கிறார்கள்.

நாம் அடிப்படை ஜோதிடத்தில் படித்திருக்கிறோம். ஒருவர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களை பற்றி தெரிவிப்பது அவர் ஜாதகத்தில் உள்ள விதி எனும் கொடுப்பினை என்றால்.. அந்த நல்ல, தீய பலன்கள் எப்போது நடைபெறும் என கால நிர்ணயம் செய்வது தான் தசாபுத்தி ஆகும்.

அதாவது இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்.. விதியில் இருப்பதை எடுத்து நடத்துவது தான் தசாபுத்தி ஆகும்.

விதியில் இல்லாததை தசாபுத்தியால் கொடுக்க முடியாது..

அதே போல, விதியில் இருப்பதை தசாபுத்தியால் நிரந்தரமாக தடுக்கவும் முடியாது.

விதி (ராசி கட்டமும், நவாம்ச கட்டமும்) ஒன்றாக இருக்கும் போது தசாபுத்தியை பற்றி பேசுவதற்கு இடமில்லை.

பாரம்பரிய ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் துல்லியமானது அல்ல.. தோராயமானதே என்பதை வாசகர்கள் இப்போது நன்கு அறிவீர்கள்.

KP ஜோதிடத்தை ஆழமாக கற்க விரும்புகிறீர்களா?

Online Tamil Astrologer வழிகாட்டுதலில் KP ஜோதிடத்தை Structured Pre-recorded Videos மூலம் தமிழில் கற்றுக் கொள்ளுங்கள்.

Explore KP Astrology Course Online
காலத்திற்கேற்ப ஜோதிடம் ஏன் மாற வேண்டும்?

இப்போது வாசகர்கள் சில கேள்விகள் கேட்கலாம்..

பாரம்பரிய ஜோதிட முறை ஒன்றுக்கும் உதவாதா?

ஜோதிடத்தில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தவறானவையா?

முன்னோர்கள் வகுத்த ஜோதிட முறையில் மாற்றங்களை கொண்டு வருவது, அவர்களின் கண்டுபிடிப்புகளை மறுப்பது தானே?

காலம் மாறும் போது ஜோதிடத்திலும் மாற்றங்கள் தேவையா?

நம் முன்னோர்கள் அறிவில் சிறந்தவர்கள். தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே பஞ்சாங்கத்தை துல்லியமாகக் கணித்தவர்கள்.

ஆனால் ஒரு சில விஷயங்களை அன்பர்கள் இங்கு நினைவு கூற வேண்டும்.

அந்த காலத்தில் மக்கள் தொகை இப்போதுள்ள அளவிற்கு அதிகமாக இல்லை. அதனால் ஒரே ஊரில், ஒரே நாளில், குறுகிய கால இடைவெளியில் பல குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருந்திருக்கும். எனவே, முன்பெல்லாம் மிகக் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை நுணுக்கமாக வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை பெரிய அளவில் இருந்திருக்காது.

ஆனால் இப்போதோ மக்கள் தொகை பல மடங்கு பெருகி, பிறப்பு விகிதமும் அதிகரித்துவிட்டது. இதனால் ஒரே ஊரில், ஒரே நாளில், சில நிமிட இடைவெளியில் பல குழந்தைகள் பிறப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. அதனால், மிக குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

மேலும், முன்பெல்லாம் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் கல்வி என்பது பொதுவானதாக இருந்தது. கல்வியில் சில குறிப்பிட்ட படிப்புக்களே இருந்தன. அதே மட்டுமன்றி வேலை மற்றும் தொழிலிலும் குறிப்பிட்ட சில துறைகளே இருந்தன.

இதனால், ஒருவர் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம், எந்தத் துறையில் பணியாற்றலாம், எந்த வகையான தொழிலை செய்வது சிறந்தது போன்றவற்றை மிக நுணுக்கமாகக் கணிக்க வேண்டிய தேவை பெரிதாக இருக்கவில்லை.

இதனால் ஒருவருக்கு ஜோதிடத்தின் வாயிலாக பொதுவான வாழ்க்கைப் பலன்களை அறிந்து கொள்வதே பெரும்பாலும் போதுமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றோ கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் எண்ணற்ற துறைகள் இருப்பதோடு அல்லாமல் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இதனால் ஒருவரின் வாழ்க்கையை பற்றிய எதிர்பார்ப்புகளும், கேள்விகளும் பல்வேறு வகைகளாக மாறி அவைகள் அதிகரித்துள்ளன. மேலும், இது போட்டி நிறைந்த உலகமாக உள்ளது.

எனவே, ஒருவரின் ஜாதக பலன்களை பொதுவாகக் கூறுவது போதுமானதாக இல்லாமல், ஜாதகத்தை துல்லியமாக கணித்து பின் நுணுக்கமாக ஆய்வு செய்து, அதற்கேற்ப துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதனால், கால சூழலுக்கு ஏற்றவாறு ஜாதகக் கணிதம் என்பது நுணுக்கமாகவும், துல்லியமாகவும் அமைய அதனை மெருகேற்ற வேண்டும்.

அதாவது இங்கே அடியேன் கூற வருவது.. முன்னோர்கள் கண்டுபிடிப்புகள் யாவும் சரியானதே. ஆனால் அவற்றை கால சூழலுக்கு ஏற்றவாறு நாம் அதை மென்மேலும் மெருகேற்ற வேண்டும்.

அன்பர்கள் இங்கே சற்று கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.

கால சூழலுக்கு ஏற்ப ஜாதகக் கணிதத்தை மெருகேற்ற வேண்டுமே தவிர, முன்னோர்கள் வகுத்த அடிப்படை விஷயங்களை நிராகரித்து முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமது முன்னோர்கள் ஜோதிடம் மற்றும் வானியல் சார்ந்த சாஸ்திரங்களை மிகச் சிறப்பாக ஆராய்ந்து, அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மிகவும் நுட்பமாகவும் தெளிவாகவும் தொகுத்து வைத்துள்ளனர்.

மனித வாழ்க்கையைப் பற்றின பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்கு தேவையான மிகச் சிறந்த அடிப்படை கோட்பாடுகளை அவர்கள் ஏற்கனவே நமக்கு வழங்கியுள்ளனர். எனவே, அந்த அடிப்படை விஷயங்களை நிராகரிக்கவோ, அவற்றை மாற்றி முற்றிலும் புதிய ஒன்றை உருவாக்கவோ தேவையில்லை.

மாறாக, காலச் சூழலும் மனிதர்களின் வாழ்க்கை முறையும் மாறியுள்ள நிலையில், அந்த அடிப்படை விஷயங்களை அப்படியே வைத்துக் கொண்டு ஜாதகக் கணிதத்தை மட்டும் காலச் சூழலுக்கு ஏற்ப மேலும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

உலகில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அதன் அடிப்படைக் கொள்கைகள் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், காலத்தின் தேவைக்கேற்ப அந்தத் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

உவமை

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், படகுகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.

நம் முன்னோர்கள் மாட்டு வண்டிகளில் தான் பயணம் மேற்கொண்டார்கள். அதனால் மாட்டு வண்டியில் செல்வது தான் நம் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு இன்றளவும் நாம் மாட்டு வண்டிகளையா பயன்படுத்துகிறோம்? இல்லையே!

இக்கால சூழலுக்கு பயணத்தின் வேகம், தூரம் மற்றும் தேவைகள் அதிகரித்ததால் இன்று மோட்டார் வாகனங்கள், ரயில்கள், விமானங்கள் மற்றும் அதிவேகக் கப்பல்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்.

காலம் மாறும் போது தேவைகளும் மாறுகின்றன. தேவைகள் மாறும் போது, அதற்கேற்ப முறைகளும் மேலும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் மேம்படுத்தப்படுகின்றன. ஜோதிடத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் வகுத்து தந்த அடிப்படை விஷயங்களை மதித்து பின்பற்றியபடியே, காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் மற்றும் கணிதத்தின் துணையுடன் ஜாதகக் கணிதத்தை மேலும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் மேம்படுத்துவது என்பது முன்னோர்களின் முறையை மறுப்பது அல்ல; அந்த முறையை மேலும் செம்மைப்படுத்துவதே ஆகும்.

நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை மிக அழகாக கூறிவிட்டு தான் சென்றுள்ளார்கள்.

“ஜோதிடம் என்பது கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது.”

எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் மாற்றம், வளர்ச்சி என்பவை இன்றியமையாதது ஆகும். மாற்றம் ஒன்றே மாறாதது. ஜோதிடத் துறை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.

Live Zoom வகுப்புகள் மூலமாகவும் கற்கலாம்

தமிழில் ஒருவர் ஒருவராக பயிற்சி பெற விரும்பினால் Online KP Astrology Consultation வழிகாட்டுதலோடு Live One-on-One Zoom Classes-ல் சேரலாம்.

Explore Live Zoom Classes
KSK ஐயா கொண்டு வந்த மாற்றம்

இதை நன்கு அறிந்த K. S. Krishnamurthy ஐயா அவர்கள், முன்னோர்கள் வகுத்த வழியிலேயே சென்று ஜாதக கணிதத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

இங்கு "முன்னோர்கள் வழியில் சென்று" என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்..

நம் முன்னோர்கள் கண்டறிந்த நவகிரகங்களை தான் KSK ஐயா அவர்களும் பயன்படுத்தினார். புதிதாக ஒரு கிரகத்தை சேர்க்கவில்லை.

நம் முன்னோர்கள் கூறியுள்ள 12 ராசிகளை தான் KSK ஐயா அவர்களும் பயன்படுத்தினார். புதிதாக எந்த ஒரு ராசியையும் சேர்க்கவில்லை.

நம் முன்னோர்கள் கண்டுபிடித்து தொகுத்துள்ள 27 நட்சத்திர கூட்டங்களை தான் KSK ஐயா அவர்களும் பயன்படுத்தினார். புதிதாக எந்த நட்சத்திரத்தையும் சேர்க்கவில்லை.

ஆனால் ஜாதக கணிதத்தில் மட்டும்..

முன்னோர்கள் வழியிலேயே சென்று இக்கால சூழலுக்கு ஏற்ப அறிவியலின் துணையோடு சில மாற்றங்களை ஏற்படுத்தி..

பிறந்த தேதி, பிறந்த ஊர் ஒன்றாக இருக்கும் போது.. பிறந்த நேரத்தில் ஒரு நிமிடம் மாறினாலும், I REPEAT.. பிறந்த நேரத்தில் ஒரு நிமிடம் மாறினாலும் கூட ஜாதகங்களை மிக அழகாக வேறுபடுத்தி காட்டி ஜோதிட உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைத்த ஜோதிட மாமன்னர் தான் K. S. KRISHNAMURTHY ஐயா அவர்கள் அது மிகையாகாது.

அதனால் இன்று ஜாதக பலன் பார்க்க வரும் ஒரு சில வாடிக்கையாளர்கள் கூட..

"தாங்கள் KP ஜோதிடரா?"

"தாங்கள் KP முறையை தானே பயன்படுத்துகிறீர்கள்?"

என்று கேட்டறிந்த பின்னரே APPOINTMENT பெறுகிறார்கள்.

அடுத்த பதிவுகளில்

இப்போது அன்பர்கள் சில கேள்விகள் கேட்கலாம்..

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு.. மேற்குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தர இருக்கிறேன்.

இந்த கட்டுரையின் முக்கிய அம்சங்கள்

உங்கள் ஜாதகத்தை KP முறையில் துல்லியமாக அறிய விரும்புகிறீர்களா?

உங்கள் ஜாதகத்தை அருண் சுப்ரமணியனிடம் KP ஜோதிட முறையில் விவரமாக ஆராய்ந்து, துல்லியமான பலனை பெறுங்கள்.

Book a Consultation

Article Published on: Existing publish date Last Updated on: 27th August 2026