கோச்சாரத்தை பற்றி விவரிக்கும் முன், முதலில் அடியேன் கோச்சாரத்தை பற்றிய சில அடிப்படை விஷயங்களை கூற விரும்புகிறேன்.
கோச்சாரம் = கோள் + சாரம்.கோள் என்றால் கிரகம்; சாரம் என்பது வடமொழி சொல், அதற்கு தமிழில் நகர்தல் என்பது பொருள் ஆகும்.
நாம் வாழும் பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி நகர்வதைப் போல, இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஓரிடத்திலேயே நில்லாமல் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. மேலும் சூரியனை மையமாக கொண்டுள்ள இந்த நீள்வட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அதை முற்காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் 27 நட்சத்திரக் கூட்டங்களாக பிரித்து அவைகள் ஒவ்வொன்றிர்க்கும் ஒரு பெயரை வைத்து பின் 27 நட்சத்திரங்களாக தொகுத்து வைத்துள்ளார்கள்.
இந்த நீள்வட்ட வடிவமான பாதை என்பதே ராசி மண்டலமாக அழைக்கப்படுகிறது. ஒரு ராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரிகளை) கொண்டது. இந்த ராசி மண்டலத்தை 12 பாகங்களாக பிரித்து, பிறகு அவைகள் ஒவ்வொன்றிர்க்கும் ஒரு பெயரிட்டு அவைகளை ராசி என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள்.
ஆக ஒரு ராசி என்பது 30 பாகைகளை { 360/12 = 30 } கொண்டது ஆகும். 30 பாகைகளை (டிகரிகளை) கொண்ட ஒரு ராசிக்கட்டம் 2 ¹/⁴ நட்சத்திரங்களை அதாவது [ (2*4) + 1 ] = 9 நட்சத்திர பாதங்களை கொண்டது ஆகும். ஒரு நட்சத்திரம் என்பது நான்கு பாகங்களை கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களின் மேல் ஒவ்வொரு கிரகமும் வலம் வருகின்றன. ஆனால் ஒவ்வொரு கிரகமும் தான் சுற்றும் வேகத்தில் மாறுபடுகின்றன.
கிரகங்களிலேயே சந்திரன் தான் வேகமாக சுற்றும் கிரகம் ஆகும். காரணம் சந்திரன் என்பவர் நாம் வாழும் பூமியை தான் சுற்றி வருகிறாரே தவிர, சூரியனை சுற்றி அல்ல என்பதை வாசகர்களுக்கு இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதாவது பூமியின் துணைக் கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறார். சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர சுமார் 27 நாட்கள் எடுத்து கொள்கிறார். ராசி மண்டலம் என்பதே பூமியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை மண்டலம் ஆகும். அதனால் தான் சந்திரன் ராசி மண்டலத்தை சுமார் 27 நாட்களில் சுற்றி விடுகிறார்.
அதன்படி சந்திரன் ராசி மண்டலத்தில் உள்ள ஒரு ராசியை கடக்க சுமார் 2 ¹/⁴ நாட்களும், ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 24 மணி நேரமும் (ஒரு நாள்) எடுத்துக் கொள்கிறார். சந்திரன் ஒரு குறிப்பிட தினத்தில் வான்மண்டலத்தில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றாரோ அது தான் அன்றைய தின நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரன் ராசி மண்டலத்தை முழுவதுமாக சுற்ற சுமார் 27 நாட்கள் ஆகும்.
புதன், சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களுக்கு ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு மாதமும்; ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 13 நாட்களும்; ராசி மண்டலத்தை முழுவதுமாக சுற்ற சுமார் ஒரு வருடமும் ஆகும்.
செவ்வாய் ஒரு ராசியை கடக்க சுமார் ஒன்றரை மாதமும், ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 20 நாட்களும் எடுத்துக்கொள்ளும்.
மேலும், ஒரு ராசியை கடக்க,குரு ஒரு வருடமும், ராகு கேதுக்கள் ஒன்றரை வருடங்களும், சனி இரண்டரை வருடங்களும் எடுத்துக்கொள்கின்றன. இதை தான் நாம் குரு பெயர்ச்சி, ராகு கேதுப் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அழைக்கின்றோம். மேலும் ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தை கடக்க குரு சுமார் 5 ¹/⁴ மாதங்களும், ராகு கேதுக்கள் சுமார் 8 மாதங்களும், சனி சுமார் 10 மாதங்களும் எடுத்துக்கொள்கின்றன.
இனி கோச்சாரத்தை பற்றி சற்று தெளிவாக பார்ப்போம்..
ஒரு குறிப்பிட்ட தினத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை பற்றி தெரிவிப்பது தான் கோச்சாரம் ஆகும். அதாவது வான்மண்டலத்தில் அப்பொழுதுள்ள கிரக நிலைகளைப் பற்றி தெரிவிப்பதே கோச்சாரம் என்று அழைக்கப்படுகிறது..
ஒரு குழந்தை பிறக்கின்ற நேரத்தின் பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் விதி அமைகிறது. ஒவ்வொருவரது ஜாதகத்திலும் இந்த விதிப்படி ஒரு சில கிரகங்கள் பாதகமாகவும் (தீமை பயக்கும் கிரகங்களாகவும்) மற்ற கிரகங்கள் சாதகமாகவும் (நன்மை பயக்கும் கிரகங்களாகவும்) அந்த ஜாதகருக்கு அமைகின்றது. அதாவது ஒருவர் பிறந்த நேரப்படி பாதகமான நிலையில் உள்ள கிரகங்கள் தீமையான பலன்களையும்; சாதகமான/நல்ல நிலையில் உள்ள மற்ற கிரகங்கள் நன்மையான பலன்களையும் அந்த ஜாதகருக்கு செய்யும்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் ஓரிடத்திலேயே நில்லாமல் 27 நட்சத்திரங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன என்பதை வாசகர்கள் தற்பொழுது நினைவு கூற அடியேன் விரும்புகிறேன்.. ஒருவரின் சுயஜாதகப்படி நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் கோச்சாரத்தில் தீமை பயக்கக்கூடிய கிரகங்களின் நட்சத்திரங்களில் (கோச்சாரப்படி) சஞ்சரிக்கும் காலங்களில் இந்த நன்மை செய்யக்கூடிய கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் சிறிது தடை ஏற்படும். மேலும் இந்த விதி அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தாது.
வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கோச்சாரத்தில் எப்படி இருந்தாலும் (எந்த ஒரு கிரகத்தின் நட்சத்திரத்தில் சென்றாலும்) அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் பாதிப்பினை உண்டாக்காது. இது போன்ற கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரகங்களின் பலன்களை காண ஒருவரின் விதியை மட்டும் ஆய்வு செய்தால் போதும்; கோச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. காரணம் மேற்குறிப்பிட்ட கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தில் அதிக நாட்கள் சஞ்சாரம் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி ஆகியோர்கள் கோச்சாரத்தில் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் நிச்சயம் சிறிதளதாவது தடையினை ஏற்படுத்தும். வாசகர்கள் நன்றாக கவனிக்கவும்; இந்த கோச்சாரத்தால் ஏற்படும் தடை என்பது சிறிதளவாக தான் இருக்குமே தவிர பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது, மேலும் ஒருவரின் ஜாதகத்தில் விதி கொடுப்பினை அதிவலுவுடன் காணப்பட்டால் இந்த கோச்சாரத்தால் பாதிப்பு வர சிறிதும் வாய்ப்பில்லை எனக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.