ஜோதிடத்தில் விதி என்கிற கொடுப்பினை என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோக, அவயோகங்களைப் பற்றி; அதாவது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றி தெரிவிப்பது ஆகும். ஆனால், அந்த நல்ல தீய பலன்கள் எப்போது?? என காலம் நிர்ணயம் செய்வது மதி என்று அழைக்கப்படும் தசாபுத்தி தான். சரி முதலில் தசை என்றால் என்ன??
தசை என்பது நவக்கிரகங்களும் ஜாதகரை இயக்கும் காலம் என்று கூறலாம். அதாவது ஒவ்வொரு கிரகமும் தன் பங்கிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜாதகரின் மேல் தன் ஆதிக்கத்தினை செலுத்தும்.
உதாரணத்திற்கு ஒரு கிரகம் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தால் அந்த கிரகத்தின் தசையோ புத்தியோ தன் வாழ்நாளில் நடைபெறும் பொழுது தான் மேற்குறிப்பிட்ட கிரகத்தின் வாயிலாக ஜாதகர் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்.
அதே போல் ஒரு கிரகம் ஜாதகருக்கு கெடுதல் செய்யும் அமைப்பில் இருந்தாலும், அந்த கிரகம் தசை வழியாக தொடர்பாகும் பொழுது தான் அந்த ஜாதகருக்கு தீமையை செய்ய அதிகாரம் பெறும்.
ஜோதிடப்படி ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்பது சுமார் 120 வருடங்கள் ஆகும். ஆனால் இப்பொழுது உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் உள்ள சில பக்க விளைவுகள் காரணமாக இன்றைய சமூகத்தினர் யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை. அப்படி வாழ்ந்தால் அது கின்னஸ் சாதனையே!
எனினும் அந்த காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் இந்த 120 வருடங்களை மனிதனின் சராசரி ஆயட்காலமாக வகுத்து ஒன்பது கிரகங்களுக்கும் அதனின் தன்மை மற்றும் காரகத்துவத்தை மையமாகக் கொண்டு அதற்கென சில தசா வருடங்களை பிரித்து வைத்தனர். அதன்படி..
சூரிய தசை ---------------- 6 வருடங்கள்
சந்திர தசை --------------- 10 வருடங்கள்
செவ்வாய் தசை ------- 7 வருடங்கள்
ராகு தசை ----------------- 18 வருடங்கள்
குரு தசை ----------------- 16 வருடங்கள்
சனி தசை ----------------- 19 வருடங்கள்
புதன் தசை --------------- 17 வருடங்கள்
கேது தசை --------------- 7 வருடங்கள்
சுக்கிர தசை ------------ 20 வருடங்கள்
என மனிதனின் ஆயட்காலத்தை தொகுத்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
மேற்கண்ட வரிசையில் தான் ஒவ்வொரு கிரகமும் தன் தசையை நடத்தும். எனினும் உலகில் உள்ள அனைவருக்கும் சூரிய தசையே ஆரம்ப தசையாக வராது. ஒரு ஜாதகரின் ஆரம்ப தசையை தீர்மானிப்பது சந்திரன் ஒருவரே. இதை பற்றி பின்னர் விளக்குகிறேன். அதற்கு முன் ஒரு அடிப்படை விஷயத்தை நான் இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.
வான்மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நம் முன்னோர்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தலா மூன்று நட்சத்திரங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் சமப்பங்காக பிரித்து வைத்துள்ளனர். அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள்.
அஸ்வினி, மகம், மூலம் ----------------------------- கேது
பரணி, பூரம், பூராடம் ----------------------------------- சுக்கிரன்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ------------- சூரியன்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் -------- சந்திரன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ----------- செவ்வாய்
திருவாதிரை, சுவாதி, சதயம் --------------------- ராகு
புணர்பூசம், விசாகம், பூரட்டாதி ----------------- குரு
பூசம், அனுசம், உத்திரட்டாதி -------------------- சனி
ஆயில்யம், கேட்டை, ரேவதி -------------------- புதன்
வான்மண்டத்தில் நவக்கிரகங்களும் 27 நட்சத்திரங்களின் மேல் வலம் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அன்றைய தின நட்சத்திரம் ஆகும். சந்திரன் ஒரு நட்சத்திரத்தை கடக்க சுமார் 24 மணி நேரம் எடுத்து கொள்ளும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒருவரின் ஜனன காலத்தின் போது (பிறந்த நேரத்தின் போது) சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருந்ததோ அந்த நட்சத்திர அதிபதியின் தசை தான் அவருக்கு ஆரம்ப தசையாக வரும். இன்னும் தெளிவாக கூறுகிறேன்..
அதாவது ஒரு ஜாதகர் பிறக்கின்ற நேரத்தின் பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.
ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசை தான் ஆரம்ப தசையாக வரும்.
உதாரணத்திற்கு ஒருவர் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு ஆரம்ப தசையாக வரும். அதன் பிறகு சூரிய தசை, சந்திர தசை என்ற வரிசையில் தொடரும். மேலும் ஒரு உதாரணத்திற்கு, ஒருவர் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். இங்கே சந்திரன் சுயச்சாரத்தில் அதாவது தன் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், சந்திர தசையே ஆரம்ப தசையாக வரும். அதன் பிறகு செவ்வாய் தசை, ராகு தசை, குரு தசை என்ற வரிசையில் தொடரும்.
அடுத்தாக ஒரு கிரகம் தசை நடத்துகிறது என்றால் அந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகரின் மேல் சற்று ஓங்கி இருக்குமே தவிர, முழு ஆதிக்கத்தினை செலுத்த முடியாது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதருடன் கைக்கோர்த்து தன் பங்கிற்கு ஜாதகர் மேல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பங்குகள் தான் புத்தி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது ஒரு தசையில் உள்ள மொத்த வருடங்களை சமப்பங்குகளாக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். இதன் விளக்கம் என்னவெனில் அனைத்து கிரகங்களின் புத்திகளையும் உள்ளடக்கியதே ஒரு கிரகத்தின் தசை ஆகும்.
அடுத்து இதே போன்று, ஒரு புத்தியை ஒன்பது பகுதிகளாக பிரிப்பது அந்தரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு தசையில் புத்தி, அந்தரம், சூட்சமம் என குறுகிக் கொண்டே போகலாம். எந்த ஒரு தசையிலும் தசாநாதரின் புத்தியே (சுயபுத்தி) முதலாவதாக இடம்பெறும். உதாரணமாக குரு தசையில், முதலில் குரு புத்தியும் அடுத்து சனி புத்தி அதற்கடுத்து புதன் புத்தி என்ற வரிசையில் தொடரும்.
அதேபோல் எந்த ஒரு புத்தியிலும் புத்திநாதரின் அந்தரமே முதலாவதாக இடம்பெறும். உதாரணமாக குரு தசை சனி புத்தியில், முதலில் சனி அந்தரமும் அடுத்து புதன் அந்தரம், கேது அந்தரம், சுக்கிரன் அந்தரம், சூரிய அந்தரம் என்ற வரிசையில் தொடர்ந்து கடைசியில் குரு அந்தரம் முடிந்தவுடன் சனி பத்தி முடிவடைந்து அதே குரு தசையில் பிறகு புதன் புத்தி ஆரம்பமாகும்.
இவ்வாறு ஒரு தசையில் உள்ள உட்பிரிவுகளான புத்தி, அந்தரம், சூட்சமங்களைக் கொண்டு ஒருவரின் ஜாதக பலனை துல்லியமாக கூற முடியும். அதாவது தசை என்பது நீண்ட காலம். அதில் உள்ள புத்தி, அந்தரம், சூட்சமம் என நுட்பமாக ஆராய்ந்தால் தான் பலனை துல்லியமாக கணிக்க முடியும்.
உதாரணத்திற்கு ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 20 வயது முதல் 40 வயது வரை ஜாதகத்தில் திருமணத்திற்கு சாதகமான அம்சங்களை வைத்திருக்கும் சுக்கிரனின் தசை நடப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் தனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று ஜோதிடரை பார்த்து கேட்கும் பொழுது; உங்கள் ஜாதகப்படி திருமணத்திற்கு சாதகமாக உள்ள இந்த சுக்கிரனின் தசையில், அதாவது இந்த 20 வருட காலத்திற்குள் திருமணம் ஆகும் என்று சொல்வது கேளிக்குரிய விஷயமாகும். அவர் ஜோதிடம் பார்க்க வந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
இது போன்ற சூழ்நிலைகளில் தான் தசையின் உட்பிரிவுகளான புத்தி, அந்தரம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேற்கண்ட உதாரணப்படி சுக்கிரன் திருமணத்திற்கு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கும் பொழுது அவருடைய சுயபுத்தியல் திருமண நடைபெற வாய்ப்பு இல்லையெனில்; வேறு ஏதாவது ஒரு கிரகம் திருமண அமைப்பிற்கு சாதகமாக உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். அப்படி இருந்தால் அந்த கிரகத்தின் புத்தி எந்த காலக் கட்டத்தில் வருகிறதோ அந்த சமயத்தில் தான் திருமணம் நடக்கும் என்பதை தெளிவாக கூற முடியும். இன்னும் ஒரு படி மேல் துல்லியமாக பார்க்க வேண்டுமெனில் அந்த புத்தியில் உள்ள அந்தரம் மற்றும் சூட்சமங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு தசை என்பது.. 9 புத்திகள் 81 அந்தரங்கள் மற்றும் 729 சூட்சமங்களை உள்ளடக்கியது ஆகும். 20 வருடங்களை கொண்ட சுக்கிர தசையில் ஒரு சூட்சமம் என்பது அதிகபட்சம் சுமார் 34 நாட்களாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஒரு ஜாதகத்தில் உள்ள விதிப்படி, ஒரு கிரகம் நன்மை செய்வதாக இருந்தாலும் அல்லது தீமை செய்வதாக இருந்தாலும் அதன் தசாபுத்தி காலங்களில் தான் அதனை செய்ய முடியும் எனக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.