ஜோதிடம் எதற்கு பார்க்க வேண்டும்..??
கடந்த ஆண்டு எனது உடன்பிறவா சகோதரியான திருமதி. நந்தினி கோபிநாத் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து; பின் அவருக்கான கொடுப்பினையை (பலனை) எடுத்துரைத்தேன். அப்பொழுது அவர் என்னிடம் ஜோதிடம் சம்பந்தமாக சில பொதுவான கேள்விகளையும் முன்வைத்தார்..
அவர் கேட்ட கேள்விகளையும், அதற்கு நான் அளித்த பதில்களையும் தொகுத்து, இங்கு அனைவருக்கும் பயன்படும் விதமாக "ஜோதிடம் எதற்கு பார்க்க வேண்டும்" என்ற தலைப்பில் ஓர் சிறிய கட்டுரையாக இப்பொழுது உங்களுக்கு வழங்குகிறேன்.
முதலில் அவர்,
விஞ்ஞானிகள் கண்டறிவதற்கு முன்னரே, நம் முன்னோர்கள் கிரகங்களை கண்டுபிடித்த ஞானிகள். அந்த கிரகங்களின் இயக்கங்களை மையமாகக் கொண்டு நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரத்தில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது; அதில் துளியளவும் மாற்றுக் கருத்து இல்லை.
ஜோதிடத்தை கொண்டு ஒருவரின் விதியை ஓரளவு தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள்; அப்படியானால் விதியில் ஒரு சில விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லையென தெரியும் பொழுது அதை நாம் ஏதெனும் பரிகாரம் செய்வதன் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ மாற்ற இயலுமா?? என்று கேட்டார்..!!
அதற்கு நான்..
விதியை எவராலும் மாற்ற முடியாது!! என்று கூறினேன்.. விதி என்பது எல்லாம் வல்ல இறைவனால் வகுக்கப்படுவது. அதை உலகில் உள்ள எவராலும் மாற்ற முடியாது. அதாவது ஒரு குழந்தை இப்பிரபஞ்சத்தில் பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை பொருத்தே அந்த குழந்தையின் விதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதிப்படி தான் அந்த குழந்தையின் வாழ்க்கை முறை அமையும். சீராக இயங்கி கொண்டிருக்கும் கிரகங்களின் நிலைகளை மாற்றுவது என்பது சற்றும் இயலாத காரியம்!! மேலும், ஒருவரின் விதி என்பது முழுக்க முழுக்க அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய/பாவ அடிப்படையிலே நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கூறினேன்..
[{(வாசகர்கள் கவனத்திற்கு: மேலும் விதியை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள நான் முன்னர் எழுதிய ‘‘கொடுப்பினை என்கிற விதி என்றால் என்ன?’’ என்ற கட்டுரையை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)}].
அடுத்து அவர்.
சரி.. விதி என்பது நிலையானது..!! ஓ. கே..!! விதியை மதியால் வெல்லலாம் என்று சிலர் கூறுகிறார்களே..!! அதற்கு என்ன அர்த்தம்?? என்று கேட்டார்..!!
அதற்கு நான்....
விதி என்கிற கொடுப்பினை என்பது ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய யோக, அவயோகங்களைப் பற்றி, அதாவது ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல, தீய பலன்களைப் (ஜாதகருடைய வாழ்க்கை முறையை) பற்றி தெரிவிப்பது ஆகும்.
மதி என்றால் சந்திரன்/நிலவு..
ஒரு ஜாதகர் பிறந்த பொழுது வான்மண்டலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருந்ததோ, அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக அமையும். ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜென்ம நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) தசையே ஆரம்ப தசையாக வரும். இதனை தொடர்ந்து மற்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் தன் தசையை நடத்தும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த தசையை தான் "மதி" என்று சுருக்கமாக நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்..
தசை என்பது நவக்கிரகங்களும் தனித்தன்மையுடன் ஒரு ஜாதகரை இயக்கும் காலம் என்று கூறலாம். அதாவது ஒவ்வொரு கிரகமும் தன் பங்கிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜாதகரின் மேல் தனது முழு ஆதிக்கத்தினை செலுத்தும். மனிதனின் முழு ஆயுள் என்று சொல்லப்படும் 120 வருடங்களை ஒன்பது கிரகங்களும் தத்தம் காரகங்களை பொருத்து பிரித்து கொண்டு; அதற்கென வரும் கால கட்டங்களின் போது (தசாபுத்தியின் போது) ஜாதகரை ஆளுமை செய்கின்றன..
உதாரணத்திற்கு..
ஒரு கிரகம் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சங்களை என்னதான் விதியில் கொண்டிருந்தாலும் அந்த கிரகத்தின் தசையோ / புத்தியோ / அந்தரமோ (மதி வழியாக) தன் வாழ்நாளில் நடைபெறும் பொழுதுதான் அந்த கிரகத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையமுடியும்.
(குறிப்பு: புத்தி என்பது தசையின் உட்பகுதி; அந்தரம் என்பது புத்தியின் உட்பகுதி ஆகும்).
சுருக்கமாக சொல்லப் போனால்.. ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றி தெரிவிப்பது விதி என்கிற கொடுப்பினை என்றால்; அந்த நல்ல தீய பலன்கள் அனைத்தும் எந்த எந்த கால கட்டங்களில் நடக்கும் என்று காலம் நிர்ணயம் (schedule) செய்வது மதி என்கிற தசாபுத்தியே.
[{(வாசகர்கள் கவனத்திற்கு: மேலும் தசாபுத்தியை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள.. நான் முன்னர் எழுதிய தசாபுத்தி என்றால் என்ன? என்ற கட்டுரையை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)}].
மேற்குறிப்பிட்ட விதி மற்றும் மதி சம்பந்தமான அடிப்படை விஷயங்களை கூறிய பிறகு, அவருக்கு விதியை மதியால் வெல்ல முடியுமா.. என்பதை பற்றி விரிவாக ஓர் உதாரணத்துடன் விளக்கினேன்.....
ஒரு ஐாதகத்தில் 7-ம் பாவம் என்பது ஜாதகரின் வாழ்க்கை துணை மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி குறிக்கும். அதே போல கிரகத்தில் ஆண் ஜாதகர்களுக்கு சுக்கிரன் களத்திர காரகராகவும்; பெண் ஜாதககர்களுக்கு செவ்வாய் களத்திர காரகராகவும் வருவார்கள்.. களத்திர காரகன் என்றால் வாழ்க்கை துணை மற்றும் திருமண வாழ்க்கையை பற்றி தெரிவிக்கும் கிரகம் ஆகும்.
பொதுவாக ஒரு ஆண் ஜாதகருக்கு பாவத்தில் 7-ம் பாவமும், கிரகத்தில் சுக்கிரனும் 6,8,12 போன்ற கொடிய பாவங்களை தொடர்பு கொண்டு கெட்டிருந்தால்; திருமண வாழ்க்கை அமைவதே கேள்விக்குறி தான்!! என்பதை விதியின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது போன்ற சூழலில் இந்த 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக வரும் கிரகத்தின் தசையோ அல்லது சுக்கிரனின் தசையோ நடப்பில் இருந்தால் (மதி வழியாகவும் தொடர்பானால்) நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கும். இங்கே தசாநாதன் என்கிற மதியும் கெட்டுப்போன மாதிரி ஆகிவிடும்..!! இதை தான் விதி வழி மதி செல்கிறது என்று கூறுவார்கள்.
ஆனால் மாறாக இந்த 7-ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் மற்றும் சுக்கிரனை தவிர மற்று ஏழு கிரகங்களில் ஏதெனும் ஒரு கிரகம் திருமணத்திற்கு சாதகமான 1,3,5,7,9,11 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடத்தும் பொழுது என்ன தான் திருமணத்திற்கான விதி (7-ம் பாவம் & சுக்கிரன்) பாதகமாக இருந்தாலும் கூட, மதி என்ற நடப்பு தசாநாதனாக வரும் கிரகம் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால்; விதியில் உள்ள அந்த தீய பலன்களை தற்காலிகமாக (அதனின் தசாகாலத்தில் மட்டும்) தடுத்து நிறுத்தி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை (விதியை எதிர்த்து மதி வழியாக) தர வல்லது. இதை தான் விதியை மதியால் (தசாபுத்தியால்) வெல்லலாம் என்று கூறுவார்கள்.
உடனே அவர்,
சரி விதி, மதி எல்லாம் ஓ.கே......
ஒருவர் பிறந்த நேரத்தைப் பொருத்து இந்த விதியும் மதியும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கக் கூடிய நல்ல தீய பலன்கள் அனைத்தும் பிறந்த நேரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு அதை மாற்ற இயலாத போது.. பரிகாரம் எதற்கு?? நீங்கள் ஏன் ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறீர்கள்? அதனால் என்ன ஆகப்போகிறது..!! மற்றும் தெய்வ வழிபாடு தேவையா?? என்று கேட்டார்...........!!!!!
மேலும் சில தீமையான விஷயங்கள் இந்த இந்த கால கட்டங்களில் நடக்கும் என்று முன்னரே தெரியும்பொழுது; அது முற்றிலுமாக தவிர்க்க படலாமே.. என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார்..
அவர் ஜோதிடத்தில் உள்ள அறியாமையால் தான் இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த நான், பிறகு ஒவ்வொன்றையும் பொறுமையாக அவருக்கு விளக்கினேன்..
வாழ்க்கை என்பது எவருக்கும் நிலையானது அல்ல.. ஏற்ற இறக்கம், இன்ப துன்பம் கலந்த கலவை தான் வாழ்க்கை. இதற்கு நம் பூமியின் துணைக்கோளான சந்திரனையே சாட்சியாக முன் வைக்கின்றேன். ஜோதிடத்தில் கிரக அந்தஸ்தை பெற்ற இந்த சந்திரன் என்பவர் 15 நாட்கள் வளரவும் (வளர்பிறை) பின் 15 நாட்கள் தேய்ந்தும் (தேய்பிறை) போகிறார்.
இதை நான் இங்கே கூறிய நோக்கம் என்னவெனில்; நல்ல தீய பலன்கள் அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. நல்ல பலன்கள் நடக்கும் பொழுது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தீய பலன்கள் நடக்கும்பொழுது அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். மேலும், இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா என ஜோதிடர்களை நாடிச் சென்று அதனை மாற்ற முற்படுகின்றனர். இது மக்களின் இயல்பு தான். நான் அவர்களை ஒரு போதும்குறை கூற மாட்டேன்.
எல்லாம் வல்ல அந்த இறைவன் எவர் ஒருவருக்கும் தீமையான பலன்களை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் கர்ம வினைகளை பொருத்தே அமைகிறது. அதை கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்.
அடுத்து பரிகாரம் எதற்கு, நீங்கள் ஏன் ஜோதிடம் பார்த்து பலன் சொல்கிறீர்கள்? அதனால் என்ன ஆகப் போகிறது..!! என கேட்டீர்களே!! அதற்கு இதோ சில உதாரணங்களுடன் பதில்.........
ஒரு ஜோதிடரிடம், வாடிக்கையாளர் ஒருவர் இப்போது நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். வேலையை விட்டுவிட்டு ஏதாவது சொந்த தொழில் செய்யலாமா?? என்று கேட்பதாக வைத்துக்கொள்ளவும்..!!
ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது ஜாதகர் செய்யும் உத்தியோகத்தை குறிக்கும். 7-ம் பாவம் என்பது சொந்த தொழிலை குறிக்கும். இவ்விரு பாவங்களில் எதுபுறம் சார்ந்த 2,4,6,10 போன்ற இரட்டைப்படை (பொருளாதாரத்திற்கு சாதகமான) பாவங்களை வலுவாக தொடர்பு கொள்கின்றதோ அதை செய்வது தான் நல்லது..
அதாவது ஒருவருக்கு 6-ம் பாவத்தை விட 7-ம் பாவம் அதிவலுவுடன் காணப்பட்டால் சொந்த தொழில் செய்ய கொடுப்பினை உள்ளது என பச்சைகொடி காட்டி விடலாம். ஆனால் மாறாக 6-ம் பாவம் வலுத்திருந்தால் உத்தியோகம் செய்வது தான் சிறந்தது; அதன் மூலமாக தான் நல்ல வருமானத்தை பெற முடியும் என்று கூறி உத்தியோகத்தை தொடர சொல்லலாம். இது தான் ஜோதிடர்களின் வாயிலாக ஒருவர் பெறும்/செய்யும் பரிகாரங்கள்....
அடுத்து கல்வி..
இது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.. இன்றைய சூழலில் திறமை ஒரு காரணமாக இருந்தாலும் கூட ஒருவர் தான் கற்ற கல்வியை பொருத்து தான் உத்தியோகம் பெற முடிகிறது. கல்வியில் இன்று எத்தனையோ துறைகள் பெருகிவிட்டன.. இப்பொழுது 10-ம் வகுப்போ, 12-ம் வகுப்போ படித்து முடித்த பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பது மேற்கொண்டு தன் மகனை/மகளை என்ன படிக்க வைக்கலாம்!! என்பதே ஆகும். ஜோதிட ரீதியில் இதற்கு தீர்வு காண முடியுமா என்று கேட்டால்; நான் நிச்சயம் முடியும் என்றே கூறுவேன்.
உதாரணத்திற்கு,
ஜோதிடத்தில் சனி பகவான் இரும்பு, இயந்திரம், இயந்திரவியல் (மெக்கானிக்கல்) போன்றவைகளுக்கு காரக கிரகமாக வருவார். ஒருவரின் சுயஜாதகப்படி சனி பகவான் வலுவாக இருந்தால் மேற்கண்ட துறைகளுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படித்தால் அதில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த துறையிலேயே உத்தியோகமோ அல்லது தொழிலோ செய்து பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ளலாம்.
அடுத்து.. புத பகவான் தொலைத்தொடர்பு, மென்பொருள் (சாப்ட்வேர்), கணிதம் போன்றவைகளுக்கு காரக கிரகமாக வருவார். புதன் பகவான் ஒருவரின் சுயஜாதகத்தில் வலுவாக இருந்தால் மேற்குறிப்பிட்ட துறைகளுள் ஏதேனும் ஒன்றை படிக்க சொல்லலாம். இதுபோல ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக உள்ளதோ அது சம்பந்தப்பட்ட துறையை படிக்க சொல்லலாம். இது தான் ஜோதிடர்களின் வாயிலாக ஒருவர் பெறும் பரிகாரங்கள்....
இது போன்று, ஒருவர் மனதில் எழும் சந்தேகங்களுக்கும், சில பிரச்சனைகளுக்கும் ஜோதிட ரீதியில் நிச்சயம் தீர்வு காண முடியுமே தவிர விதியில் உள்ளதை எந்த ஒரு பரிகாரம் மூலமாகவும் மாற்ற முடியாது என்பதே அடியேனின் ஆணித்தரமான கருத்தாகும். உண்மையில் பரிகாரம் என்பதற்கு தமிழில் மாற்றுச் செயல் என்பது பொருள். மேலும் பரிகாரம் பற்றிய சில உண்மைகளை வெகு விரைவில் ஒரு கட்டுரையாக தொகுத்து எழுத உள்ளேன் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்..
அடுத்ததாக.. சில தீமையான விஷயங்கள் இந்த இந்த கால கட்டங்களில் நடக்கும் என்று முன்னரே தெரியும் பொழுது; அது முற்றிலுமாக தவிர்க்கபடலாமே.. என்று கேட்டீர்கள்..!!
ஒரு ஜாதகருக்கு எதிர் வரும் காலங்களில் மோசமான சம்பவம் ஏதாவது ஒன்று நிகழ இருந்து; பின் அது ஜோதிடர்கள் மூலமாக தெரிய வந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஜோதிடர்களிடம் ஆலோசனைகள் பெறுவதன் மூலமாக வரவிருக்கும் அச்சம்பவத்தை சமாளிக்க முடியுமே தவிர அதை முழுவதுமாக தடுக்க முடியாது. விதியை மாற்ற ஜோதிடர்கள் ஒன்னும் கடவுள் இல்லையே..!! ஒரு ஜோதிடரால் நடக்க இருக்கும் சம்பவத்தை ஜாதகருக்கு சுட்டிக்காட்டி சற்று கவனமாக இருக்க சொல்லலாம் அவ்வளவே!!
அடுத்து எந்த ஒரு சுபகாரியம் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு நல்லநாள்/நேரம் பார்ப்பது அவசியம். இதன் சூட்சமத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் விளக்குகிறேன். ஒருவரின் சுயஜாதகத்தில் வலுவாக இருக்கின்ற கிரகங்களின் நட்சத்திரம் சம்பவிக்கும் காலங்களில் ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பயனுள்ளதாக அமையும். இது போன்று சாதகமான காலத்தை ஜோதிடத்தின் வாயிலாக அறிந்து கொண்டு அதில் ஒரு விஷயத்தை தொடங்குவதனால் நல்ல வளர்ச்சி அடைய முடியும்.
இப்பொழுது நீங்கள் உங்கள் மனதில் ஒன்று நினைக்க கூடும். அதாவது ஜோதிடர் சொன்ன ஆலோசனைப்படி நடந்தால், சில நேரம் விதியை மாற்றுவது போல் ஆகிவிடாதா என்று....!
அதாவது ஒரு ஜாதகர் ஒரு சிறந்த ஜோதிடரை அனுகி அவரிடம் ஆலோசனைகளை பெற்று அதன்படி நடந்து, நல்ல வழியில் தன் வாழ்க்கையை அமைத்து கொள்வது கூட விதியில் நிர்ணயிக்கப்படும் விஷயம் தான். இறைவனின் அருளால் உருவானது தானே இந்த ஜோதிடம்..!! ஏன் இப்பொழுது நவக்கிரகங்களின் உதவியோடு நான் எழுதியுள்ள ஜோதிடம் சம்பந்தமான இந்த கட்டுரையை படிப்பது கூட முன்னரே விதியில் நிர்ணயிக்கப்பட்டது தான்..
விதியை (விதியில் உள்ள தீய பலன்களை) மாற்ற இயலாத போது தெய்வவழிபாடு அவசியமா?? என்று முன்பு கேட்டீர்கள். நீங்கள் கேட்ட விதம் சரியானதாக இருந்தாலும், அது மிக மிக தவறான கேள்வி.
நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த சில பாவங்களுக்காக தான் இப்பிறவியில் சில மோசமான பலன்களை அனுபவிக்கின்றோம். எவர் ஒருவரும் தெரிந்தோ தெரியாமலோ தான் ஒரு பாவத்தை செய்யும் பொழுது தெய்வத்தை நினைப்பதே இல்லை..!! அந்த கர்ம வினைகளின் பயனாக சில மோசமான பலன்களை அனுபவிக்கும் போது மட்டும் தெய்வத்திடம் தன்னை காப்பாற்ற வேண்டுகின்றனர்.. இருப்பினும் தெய்வம் யாரையும் கைவிடுவதில்லை. உண்மையில் தெய்வத்தை வணங்கி வந்தால் கர்ம வினைகளின் பயனாக சில மோசமான பலன்கள் நடக்க இருந்தாலும்; அதனின் வீரியம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினேன்.
இதை அனைத்தும் கேட்ட பிறகு அவர், எனது எதிர்கால பலன்கள் மட்டுமல்லாமல் ஜோதிடம் சம்பந்தான சில சூட்சமங்களையும் இப்பொழுது நன்றாக தெரிந்து கொண்டேன்.......... மிக்க நன்றி என்று கூறினார்.
இறுதியாக..
ஒருவர் தன் வாழ்க்கையில், சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும், சோதனையான காலங்களிலிருந்து மீண்டு வருவதற்கும் எல்லாம் வல்ல இறைவன் இந்த புண்ணிய பூமியில் உள்ள சில தலைசிறந்த ஜோதிடர்களின் வாயிலாக நிச்சயம் ஒரு நல்ல வழியை காட்டுவார்; ஆனால் அதற்கும் ஜாதகத்தில் தெய்வத்தின் கொடுப்பினை இருக்க வேண்டும் எனக் கூறி இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்..
|