திருமண பொருத்தத்தில் நட்சத்திர பொருத்தம் தேவை தானா..!!
இன்று பெரும்பாலான மக்கள் ஜோதிடர்களை அனுகுவது திருமண பொருத்தம் மற்றும் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக தான்..!
காரணம், பொதுவாக பெற்றோர்கள் தன் மகளுக்கோ அல்லது மகனுக்கோ முன் பின் தெரியாத ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கும் பொழுது ஜோதிட ரீதியாக அவர்கள் இருவரும் எந்த வித குறையும் இல்லாமல் மன ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்களா!! என்பதை தெரிந்து கொள்வதற்காகவே..
ஒருவரது வாழ்வில் பெரும்பகுதியாக அமைவது இந்த திருமண வாழ்க்கை தான். ஏன் ஒரு சிலரது வாழ்வில் இந்த திருமண வாழ்க்கை என்பது ஒரு திருப்புமுனையாகவும் அமைகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே தங்களது தாய் தந்தையினருடன் வாழ்கிறார்கள். திருமணமான பிறகு தன் கணவரையும் அவரது குடும்பத்தினரையும் சார்ந்து தான் வாழ்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட தினத்தன்று வான்மண்டலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கின்றதோ அது தான் அன்றைய தினத்தின் நட்சத்திரம் ஆகும். வான்மண்டலத்தில் சந்திரனுக்கு ஒரு நட்சத்திரத்தினை கடக்க தோராயமாக 24 மணி நேரம் (ஒரு நாள்) ஆகும். ஒருவர் ஜனனமான நேரத்தின் போது (பிறந்த நேரத்தின் போது) சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சென்று கொண்டிருந்ததோ, அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரமாக அழைக்கப்படுகிறது. ஆக ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் என்பது முழுக்க முழுக்க சந்திரனை மையமாக கொண்டதாகும். ஜோதிடத்தில் சந்திரன் முக்கியமாக நம் மனதிற்கும், மனதில் எழும் எண்ணங்களுக்கும் காரகம் வகிப்பவர். எனினும் அந்த எண்ணங்களை செயல்களாக மாற்றவதற்கு மற்ற எட்டு கிரகங்களின் பங்கு அவசியமானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்றைய சூழலில் திருமண பொருத்தத்தின் போது இந்த ஜென்ம நட்சத்திரம் என்பது விஸ்வரூபம் எடுக்கின்றன. ஆம் இன்று ஒரு சில ஜோதிடர்கள் இந்த ஜென்ம நட்சத்திரத்தை மட்டும் கருத்தில் கொண்டு வெறும் நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பச்சைக்கொடி காட்டி விடுகிறார்கள்.
சரி, அந்த நட்சத்திர பொருத்ததையாவது சரியாக பார்க்கிறார்களா என்றால்.. இல்லை.. அதிலும் ஏகப்பட்ட குழறுபடி! ஒரு சில நட்சத்திரங்களுக்கு பழமொழி என்ற பெயரில் போலி விதிகளை உட்புகுத்தி இந்த திருமண பொருத்தத்தையே நாசம் செய்து ஜோதிடம் பொய்த்து போவதற்கு வழி வகுக்கிறார்கள்.
உதாரணத்திற்கு..
பூராடம் போற இடம் போராடும்..
பூராடம் கலுத்தில் நூலாடாது..
என்று சில புலமை வாய்ந்த அரைகுறை ஜோதிடர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அளந்து விடுகிறார்கள்.
மேற்கூறிய பழமொழிகள் இரண்டும் ஒரு பெண் பூராடம் நட்சத்திரத்தில் பிறப்பது மோசமான அமைப்பு என்பதனை சுட்டிக் காட்டுகிறது.
அதாவது முதல் பழமொழி....
பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கின்ற பெண் திருமணமாகி போகின்ற புகுந்த வீட்டில் (கணவர் குடும்பத்தில்) போராடுவார்/வாக்குவாதம் செய்வார் எனக் கூறுகிறது.
இரண்டாவது பழமொழி....
பூராடம் நட்சத்திரத்தில் பிறக்கின்ற பெண்ணிற்கு திருமணமானாலும் நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ முடியாது, அதாவது சீக்கிரம் விதவையாகிவிடுவார் என்பதாகும்.
நான் சமீபத்தில் கூகுளில் தேடிய போது, நம் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 74927 குழந்தைகள் பிறப்பதாகவும்; அதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4495 குழந்தைகள் பிறக்கின்றதாகவும் கூறப்பட்டிருந்தன. அதாவது சராசரியாக நம் தமிழ்நாட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2180 ஆண் குழந்தைகளும், 2315 பெண் குழந்தைகளும் பிறக்கின்றது என அவற்றில் கூறப்பட்டிருந்தன. அப்படி பார்க்கையில் பூராடம் நட்சத்திரத்தன்று பிறக்கும் 2315 பெண் குழந்தைகளுக்கும் இது போன்ற மாங்கல்ய தோஷம் அல்லது போராடும் குணம் இருக்குமா?? என்று கேட்டால் நான் இல்லை என்று தான் கூறுவேன்.
உயர்கணித சார ஜோதிட முறைப்படி நுட்பமாக ஆராய்ந்தால் ஒவ்வொரு 30 வினாடிக்கும் விதி கொடுப்பினை மாறிக் கொண்டே இருக்கும். அப்படி இருக்கையில் எப்படி ஒரு தினத்தில் பிறந்த இந்த 2315 குழந்தைகளுக்கும் விதி ஒரே மாதிரியாக அமையும்.. ஒரு சில ஜோதிடர்கள், இது போன்ற போலி விதிகளை பழமொழிகளாக கூறி, அந்த தோஷம் இந்த தோஷம் என்றெல்லாம் சொல்லி; பரிகாரம் செய்தால் தான் சரியாகும் என சில அப்பாவி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள். சரி நான் விஷயத்திற்கு வருகிறேன்..
ஜோதிடத்தில் ஜென்ம நட்சத்திரத்தின் பங்கு தான் என்ன?
ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் மையமாக கொண்ட இந்த ஜென்ம நட்சத்திரத்தின் பங்கு ஒரு பகுதியிலும் ஒரு பகுதி தான் என்பதே அடியேனின் கருத்தாகும்.. காரணம் ஜோதிடத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு காரகம் வகிக்கின்றன. கிரகங்களிலேயே வேகமாக சுற்றும் கிரகம் சந்திரன் ஆகும். அதனால் தான் ஒருவர் பிறக்கின்ற பொழுது மற்ற கிரகங்கள் சஞ்சரிக்கும் நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக எடுத்துக்கொள்கிறோம்.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தின் அதிபதி யாரோ அவருடைய தசை தான் ஆரம்ப தசையாக வரும். நம் இந்திய ஜோதிடத்தில் உள்ள மகத்தான சிறப்பு என்னவெனில்; சந்திரனை அடிப்படையாகக் கொண்டு தசா புத்திகளை நிர்ணயித்து அந்தந்த காலத்திற்கேற்றார் போல் பலனுரைப்பதே ஆகும். சந்திரனை மையமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஜென்ம நட்சத்திரம் என்பது தசாபுத்திகளை நிர்ணயிக்க தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இப்படிப்பட்ட சந்திரனை மட்டும் மையமாக கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையையே தீர்மானிப்பது சரியா? இது எந்த விதத்தில் நியாயம்??
அப்படியென்றால் ஜோதிடத்தில் திருமண பாவமான 7-ம் பாவம் எதற்கு? லக்ன பாவம் எதற்கு? எல்லாவற்றிர்க்கும் மேல் களத்திரகாரகரான அதாவது திருமண வாழ்க்கைக்கு உரிய கிரகமான சுக்கிரன் (ஆணிற்கு) செவ்வாய் (பெண்ணிற்கு) எதற்காக..?? கதாநாயகர்களே இவர்கள் தானே.....!!
சரி.. ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக இந்த 7-ம் பாவம், லக்ன பாவம், களத்திர காரகன் திருமணத்திற்கு உண்டான நல்ல நிலையில் இருந்து விட்டால் பரவாயில்லை; மாறாக பாதகமாக இருந்துவிட்டால்; என்னதான் இந்த நட்சத்திர பொருத்தம் படி 9 பொருத்தங்கள் இருந்து திருமணம் செய்து வைத்தாலும் திருமண வாழ்க்கை மோசமானதாகவே அமையும். ஏன் விவாகரத்து வரை கூட சென்று விடும். மேற்கண்ட ஏழாம் பாவம், லக்ன பாவம், சுக்கிரன், செவ்வாய் போன்ற காரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்திரனை மட்டும் மையமாக கொண்ட நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்ப்பது சரியல்ல என்பதை வாசகர்களாகிய உங்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றேன்..
மேலும் திருமண பொருத்தத்திற்கு நட்சத்திரம் மட்டும் தான் தேவை என்றால் பிறந்த தினத்தன்று காலண்டரில் போடப்பட்டிருக்கும் நட்சத்திரத்தை குறித்து வைத்து கொள்ளலாமே! எதற்காக ஒரு ஜோதிடரை அனுகி ஜாதகம் கணிதம் செய்ய வேண்டும்..?? பிறகு ஜோதிடம் தான் எதற்கு..??
சரி வெறும் இந்த நட்சத்திர பொருத்தங்களை மட்டும் பார்ப்பது இது போன்ற அரைகுறை ஜோதிடர்கள் உடன் நின்று விட்டால் பரவாயில்லை. இன்று ஒரு சில மக்கள் இதை பார்த்து கொண்டு தங்களது ஸ்மார்ட் போன்களில் உள்ள ஆண்டிராய்டு அப்ளிகேஷன்கள் மற்றும் வெளியில் விற்கப்படும் சில புத்தகங்களில் உள்ள நட்சத்திர பொருத்த விதிகளை கொண்டு தாங்களே பொருத்தம் பார்த்து முடிவெடுக்கின்றனர்.
இங்கே நான் நட்சத்திர பொருத்தம் பார்க்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை ஒரு பகுதியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். நட்சத்திரம் என்பது சந்திரனை மட்டும் மையப்படுத்தி கணக்கிடப்படுவது என்பதனை திரும்பவும் வாசகர்களாகிய உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஏன் சில நட்சத்திர பொருத்தங்கள் சாதமாக இல்லாவிட்டாலும் கூட களத்திர காரகன் சுக்கிரன்/செவ்வாய், ஏழாம் பாவம் மற்றும் லக்ன பாவம் திருமணத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் திருமணம் செய்யலாம்.
சரி இது போகட்டும்.. மற்றொரு புறம்……
"கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்"
(ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது),
மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது,
(கேட்டை நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது).. என்ற கருத்து நிலவி வருகிறது.
இப்படியே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒதுக்கி வந்தால் ஒரு கட்டத்தில் 27 நட்சத்திரங்களையும் ஒரு குறிப்பிட்ட உறவினருக்கு ஆகாது என வெறுத்து ஒதுக்க வேண்டியது தான். பின்பு ஒருவருக்கும் திருமணம் ஆகாது.
நம் முன்னோர்கள் எந்த ஒரு நட்சத்திரத்தையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ தரம் பிரித்து சொன்னதில்லை. வான்மண்டலத்தில் அனைத்து நட்சத்திரங்களும் 13 பாகைகள் 20 கலைகள் (4 பாதங்கள்) கொண்டது என்பதே இதற்கு சாட்சி.
எவர் ஒருவர் வாழ்க்கையையும் தான் பிறந்த நட்சத்திரம் தீர்மானிக்காது. ஒருவரின் வாழ்க்கை முறையை தீர்மானிப்பதில் அவருடைய லக்ன பாவமே பிரதானமானது. ஒரு பெண்ணின் நட்சத்திரம் அவருடைய வாழ்க்கையையே தீர்மானிக்காத போது எப்படி அவரின் மாமனாரையோ, மாமியாரையோ, மூத்த மைத்துனரையோ பாதிக்கும். உண்மையில் ஒருவரது வாழ்க்கை முறை அவரது சுய ஜாதகத்தை பொருத்தே அமையும். எந்த ஒரு நட்சத்திரத்து பெண்ணும் தனக்கு மருமகளாக வருவதால் அவரின் வாழ்க்கை பாதிக்காது. என்றோ! யாருக்கோ! ஒருவருக்கு நடந்ததை மனதில் கொண்டு அதை அப்படியே பழமொழிகளாக கூறி வருகிறார்கள். இந்த பழமொழிகளை பின்பற்றி வரும் சில அரைகுறை ஜோதிடர்களின் வாயிலாக இன்று சாதாரண மக்களும் இதை பெரிது படுத்துகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில்..
ஒரு பெற்றோர் திருமண வயதை நெருங்கிய தன் மகனுக்கு வரன் பார்க்கின்ற வேளையில் நட்சத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் தன் மகனுக்கு அவரின் நண்பர்கள் மூலமாகவோ, உறவினர்கள் மூலமாகவோ அல்லது சில திருமண தகவல் மையங்கள் வாயிலாகவோ வரனை தேர்ந்தெடுக்கும் பொழுது இது போன்ற நட்சத்திரங்களின் (பூராடம், ஆயில்யம், மூலம், கேட்டை) பெயரை கேட்டாலே..
இல்லை.. இல்லை.. சரி வராது!!
இந்த நட்சத்திரமா..!!!! வேண்டாம் பா! என்று தடாலடியாக கூறிவிடுகிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்வது??
இதனால் எத்தனை பெண்களுடைய திருமணம் தாமதப்படுகிறது. ஏன் ஒரு சில பெண்களுக்கு இதனால் இன்னும் திருமணமே ஆகாமல் இருக்கிறது. உண்மையில் இது போன்ற நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் ஜாதகங்களை நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு சிலர் நல்ல குணங்களுடனும், திறமைசாலிகளாகவும் திருமண வாழ்க்கைக்கு சாதகமான அம்சங்களையும் கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக.. ஒருவரின் திருமண வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவரது ஜாதகத்தில் உள்ள ஏழாம் பாவம் மற்றும் களத்திர காரகன் (ஆண்-சுக்கிரன் பெண்-செவ்வாய்) ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதனை கூறி திருமண பொருத்தத்தின் போது ஜென்ம நட்சத்திரத்தை காட்டிலும் இவ்விரண்டிற்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
|