ஏன், எதற்காக பிரசன்னம்?
பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவகிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவதாகும். இந்த ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல தீய பலன்களையும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த பலன்கள் எப்போது நடைபெறும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புக்களில் குழப்பம் உள்ளவர்களுக்கும் பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். ஜாதகமே இல்லை என்றாலும், வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சனைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும், பிரசன்னம் மூலம் மிக எளிதாக தீர்வு காண முடியும்.
ஜாதகம் உள்ளவர்களுக்கும் பிரசன்னம் ஏன் அவசியம்?
தற்சமயம் உத்தியோகத்தில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர், தான் இருக்கும் வேலையை விட்டு சொந்த தொழிலில் இறங்கலாமா என்று கேட்பதாக வைத்துக்கொள்வோம். ஜோதிடத்தில் 6-ம் பாவம் உத்தியோகத்தையும், 7-ம் பாவம் சொந்த தொழிலையும் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது 2, 4, 6, 10 போன்ற புறம் சார்ந்த பாவங்களை தொடர்பு கொண்டு வலுவாக இருக்கின்றதோ, அது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதே சிறந்தது.
ஒரு வேளை விதியின் படி இவ்விரு பாவங்களும் சம வலுவுடன் இருந்து, நடப்பு தசாநாதனும் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை குறிக்காவிட்டால், எதை செய்தாலும் பெரிய வித்தியாசம் வராது என்பதே அர்த்தம். ஆனால் இதை மட்டும் வைத்து ஜோதிடர் இரண்டையும் நல்லது என்று கூறினால், வாடிக்கையாளர் மேலும் குழப்பமடைவார். இப்படிப்பட்ட சமயங்களில் பிரசன்னம் மூலமாக இரண்டில் எது அதீத நன்மை தரும் என்று உறுதியாக கூறிவிட முடியும்.
கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சம ரன்கள் குவித்தால், வெற்றி தோல்வி தீர்மானிக்க சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படுவது போல, ஜனன கால ஜாதகம் உள்ளவர்களுக்கும் சில நேரங்களில் பிரசன்னம் அவசியமாகின்றது.
எப்போது பிரசன்னம் தேவைப்படும்?
மிக மிக குறுகிய கால இடைவெளியில் அரங்கேறும் சம்பவங்களை, அல்லது ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, ஜனன ஜாதகத்தில் உள்ள விதி மற்றும் மதியை கொண்டு நிர்ணயம் செய்வது சற்று கடினமான காரியம். இது போன்ற சூழல்களில் வாடிக்கையாளர்களால் அடிக்கடி கேட்கப்படும் சில யதார்த்தமான கேள்விகள் கீழே:
இது போன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலம் மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.
பிரசன்னத்திற்கான வரைமுறைகள்
ஒரு பிரசன்னத்தின் மூலம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் இருந்தால், அத்தனை முறை தனித்தனியாக பிரசன்னம் பார்க்கப்பட வேண்டும்.
கேட்கப்படும் கேள்விகள் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். "நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?" போன்ற தன்னுடன் நேரடி தொடர்பில்லாத பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னம் மூலம் தீர்வு காண முடியாது.
ஜாதகர் தமக்காகவோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, அல்லது நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ மட்டுமே கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போது தான் பிரசன்னம் பலிதம் ஆகும்.
பிரசன்ன ஜாதகம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
KP ஜோதிடத்தில் பிரசன்ன ஜாதக கணிப்பு முறை →




