கொடுப்பினை என்கிற விதி என்றால் என்ன??
இவ்வுலகில் உள்ள மனிதர்களாகிய நம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதாவது நம் பூர்வ ஜென்ம கர்ம வினைகளை ஆதாரமாக கொண்டு நவக்கிரகங்களின் வாயிலாக இறைவன் நம் ஒவ்வொருவரையும் இயக்கி வருகின்றார் என்பதே அடியேன் கூறும் கருத்தாகும். எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் நேரிடையாக உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.
ஒரு குழந்தை பிறக்கின்ற நேரத்தின் பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதும் விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த விதி ஒரே மாதிரியாக அமைகிறதா?? என்று கேட்டால் நான் நிச்சயம் இல்லை என்றே கூறுவேன். காரணம், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதரின் முகமும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவது போல ஒவ்வொருவரின் ஜாதகமும் (விதியும்) தனித்தன்மை வாய்ந்தது ஆகும்.
இதை விஞ்ஞான பூர்வமாக கூற வேண்டுமெனில், நான் மேலே கூறியது போல், ஒரு ஜாதகரின் விதி என்பது அந்த ஜாதகர் பிறக்கும் பொழுது வானமண்டலத்தில் இருந்த கிரக நிலைகளே ஆகும். கிரகங்கள் யாவும் வானமண்டலத்தில் நொடிக்கு நொடி நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆகா ஒரு ஜாதகர் பிறந்த பொழுது இருந்த கிரக நிலை மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை.
ஒவ்வொருவரின் விதியையும் எல்லாம் வல்ல இறைவனே நிர்ணயம் செய்கின்றார் என்று மேலே கூறியிருந்தேன். எல்லாம் வல்ல அந்த இறைவன் விதியை வெறுமனே யாருக்கும் நிர்ணயிப்பது இல்லை. எல்லாவற்றிர்கும் அடிப்படை ஆதாரம் ஒன்று உள்ளது. அந்த ஆதாரம் என்பது வேறு ஒன்றுமில்லை. நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளே ஆகும். நம் பூர்வ ஜென்ம தொடர்புகள் அனைத்தும் தேவ ரகசியங்கள் ஆகும். அதன் அடிப்படையிலே இந்த ஜென்மத்தில் நமக்கு பலாபலன்களை இறைவன் நிர்ணயம் செய்கின்றார்.
ஜோதிடத்தில் பெண்களை குறிக்கின்ற கிரகம் சுக்கிர பகவான் ஆவார். ஒரு ஜாதகர் முன் ஜென்மத்தில் பெண்களுக்கு துரோகம் செய்தோ அல்லது பெண்களை கஷ்டபடுத்தியோ இருந்தால்; இந்த ஜென்மத்தில் நிச்சயம் பெண்கள் வாயிலாக பிரச்சனைகளையும், வலி, வேதனை, அசிங்க அவமானங்களையும் சந்திக்க நேரிடும். இது தானே இயற்கையின் நியதி. ஆக இது போன்ற ஜாதகர்களுக்கு சுக்கிர பகவான் வான்மண்டலத்தில் மோசமான அமைப்பில் இருக்கும் சமயத்தில் ஜாதகரை பிறக்க வைப்பார். குழந்தை பிறப்பு என்பதே இயற்கை தான். குழந்தை இந்த நேரத்தில் தான் பிறக்கும் என்று நொடிக்கணக்கில் முன்னரே மருத்துவர்களால் கூட கூறுவது மிக கடினமான காரியம் என்பதை வாசகர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அடுத்து ஒவ்வொரு கிரகமும் தன்னுள் கொண்டுள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு பூமியில் செலுத்தும் கதிர்வீச்சுகளின் மூலம் மனிதர்களை பலவித மாற்றுதல்களுக்கு உட்படுத்துகின்றன. நம் முன்னோர்கள் ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் எவ்வாறு மனித உயிர்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்து, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சில காரகங்களை தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் நிற்காமல் பன்னிரெண்டு பாவங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன என்பதை ஆதாரமாக கொண்டு, பின்னர் ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சின் தன்மை மற்றும் அளவு என்பது அதன் இருப்பிடத்தை (பாவத்தை) பொருத்து வேறுபடுகிறது என்பதை உணர்ந்து பன்னிரெண்டு பாவங்களுக்குள்ளும் ஒன்பது கிரகங்களின் காரகங்களை தொகுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
காரகம் என்பதை ஆங்கிலத்தில் significator என்று கூறுவார்கள். அதாவது ஒன்றனை பற்றி குறிப்பிடுவது ஆகும் (signifies something). பொதுவாக ஜோதிடத்தில் காரகம் என்பது ஒரு கிரகமோ/பாவமோ ஒரு விஷயத்தினை பற்றி குறிப்பிடுவது ஆகும் (A planet/bhava that signifies something). அதாவது ஜோதிடத்தில் எந்த ஒரு விஷயத்தை பற்றியும் அறிந்து கொள்ள அதற்குரிய காரகத்தை பார்ப்பது அவசியமானது ஆகும்.
உதாரணத்திற்கு..
கல்விக்கு புதன் கிரக காரகமாகும்; பாவ காரகத்தில் நான்காம் பாவம் அடிப்படை கல்வியையும், ஒன்பதாம் பாவம் உயர்நிலைக் கல்வியையும் குறிப்பிடுகின்றது. ஆக ஜோதிட ரீதியில் ஒருவரின் கல்வியைப் பற்றி தெரிந்து கொள்ள புதன் கிரகத்தையும், நான்காம் பாவத்தையும் (அடிப்படை கல்விக்கு), ஒன்பதாம் பாவத்தையும் (உயர்நிலைக் கல்விக்கு) ஆய்வு செய்ய வேண்டும்.
மேற்கண்ட காரகங்கள் (கிரக காரகம், பாவ காரகம்) தான் ஒருவரின் விதியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் ஜாதகத்தின் தலைமை பீடமாக கருதப்படும் லக்ன பாவமும், இறையருளை குறிக்கும் ஒன்பதாம் பாவமும் விதியை நிர்ணயிப்பதில் சிறிதளவு பங்கு வகிக்கின்றன.
அதாவது நல்ல பலன்களோ, தீய பலன்களோ அதை அனுபவிப்பது லக்னம் என்ற ஜாதகர் தானே. மேலும் எந்த ஒரு காரகத்தையும் (விஷயத்தையும்) அனுபவிக்கும் ஆற்றல் ஜாதகரிடம் இருந்தாலும், அதில் சிறிதளதாவது முயற்சியும், ஈடுபாடும் ஜாதகர் காட்ட வேண்டும். அப்பொழுது தான் ஜாதகர் அதை செயல்படுத்தவோ அல்லது முழுவதுமாக அனுபவிக்க முடியும். ஆக ஒருவரின் கொடுப்பினையை நிர்ணயிப்பதில் லக்ன பாவத்திற்கும் சிறிதளவு பங்கு இருக்கின்றது என்பதை இப்பொழுது வாசகர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அடுத்து ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் என்பது தெய்வத்தை குறிக்கின்ற பாவமாகும். ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் வலுவாக இருந்தால் அவருக்கு தெய்வ அணுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும்.. ஒரு விஷயத்தை அனுபவிக்க தெய்வ அணுகிரகம் இருந்தால் அந்த குறிப்பிட்ட விஷயத்தை எந்த அளவிற்கு சிறப்பாக அனுபவிக்க முடியும் என்பதை வாசகர்களாகிய உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். மேலும் ஒரு விஷயத்தை நாம் அனுபவிக்க தெய்வ அணுகிரகம் கிடைக்க விட்டாலும் தெய்வம் நமக்கு தடை காட்டாமல் இருந்தாலே போதும். அந்த விஷயத்தை எப்படியாவது நாம் அனுபவித்து விடலாம். ஆக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், கொடுப்பினையில் அதற்கு தெய்வ அணுகிரகம் உள்ளதா என்பதை பார்க்க இந்த ஒன்பதாம் பாவத்தை ஆய்வு செய்வது அவசியமானது ஆகும்.
ஒரு ஜாதகரின் விதியை பாவ காரகம் 40 சதவிகிதமும், கிரக காரகம் 40 சதவிகிதமும், லக்ன பாவம் 15 சதவிகிதமும், ஒன்பதாம் பாவம் 5 சதவிகிதமும் நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு ஆண் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கான விதியை நிர்ணயிப்பது 40% ஏழாம் பாவமும், 40% சுக்கிரனும், 15% லக்ன பாவமும், 5% ஒன்பதாம் பாவமும் ஆகும். அதே போல் ஒரு ஜாதகத்தில் குழந்தை பிறப்பிற்கான விதியை நிர்ணயிப்பது 40% ஐந்தாம் பாவமும், 40% குருவும், 15% லக்ன பாவமும், 5% ஒன்பதாம் பாவமும் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலம் அவரின் தோற்றம், குணம், ஆரோக்கியம், அந்தஸ்து, தனநிலை, சொத்து, திருமண வாழ்க்கை, உத்தியோகம், தொழில், நண்பர்கள் மற்றும் அவர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவாரா!! கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பாரா.... கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பார் எனில் எதன் ரீதியில் அனுபவிப்பார் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு சிலர்..... சரி ஒருவர் பிறக்கின்ற நேரத்தை பொருத்து தான் அவரது விதி அமைகிறது எனில் ஒரு நல்ல நேரத்தை குறித்துக் கொண்டு அறுவை சிகிச்சை மூலமாக (சிசேரியன் முறையில்) குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வர முடியுமே என நினைக்கின்றார்கள். ஜோதிடம் கற்ற ஆரம்ப காலத்தில் எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் எழுந்தது தான்..
இது பற்றி நான் தெரிந்து கொண்டதை இப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது அறுவை சிகிச்சை (சிசேரியன்) முறை என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மற்ற அறுவை சிகிச்சை முறைகளை காட்டிலும் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும்.
மேலும் இது பற்றி அறிந்து கொள்ள மருத்துவ துறையில் உள்ள எனது நண்பரின் ஆலோசனையும்; கூகுளில் அலசியபோது கிடைத்த தகவல்களும் பெரிதும் உதவின. ஒரு சிசேரியன் முறையை வெற்றிகரமாக முடிக்க குறைந்தது 2 நிமிடமும் அதிகபட்சம் 45 நிமிடங்களும் ஆகும். இந்த 2 நிமிட அணுகுமுறையை கூட மருத்துவர்கள் அவரச காலத்திற்கு (in an emergency case) மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உயர்கணித சார ஜோதிடப்படி நுட்பமாக ஆய்வு செய்தால், ஒவ்வொரு 30 வினாடிக்கும் விதி கொடுப்பினை மாறுவதை நாம் தெளிவாக பார்க்க முடியும். இப்படியிருக்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் இந்த இயற்கைக்கு மாறான அறுவை சிகிச்சை (சிசேரியன்) முறையை கையாள்வது சற்றும் இயலாத காரியம் அல்லது மிக மிக கடினமான காரியம் என்பதே அடியேனின் கருத்தாகும்.
ஒருவரின் விதி என்கிற கொடுப்பினை என்பது அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவ அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது. இதை நான் அனுபவ பூர்வமாக உணராவிட்டாலும் இது பற்றி நம் முன்னோர்கள் எழுதிய நூல்களை படித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன். ஒருவரை பார்த்து ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட தேதியில் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டால் அவர் பதிலளிக்க சற்று யோசிக்கும் பொழுது போன ஜென்மத்தில் நடந்தது மட்டும் எப்படி நம்மை போன்ற மனிதர்களுக்கு ஞாபகம் இருக்கும். ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவங்கள் அனைத்தும் தேவ ரகசியமே.
ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவத்தை (கர்ம வினைகளை) மையமாக வைத்து, நவகிரகங்களின் வாயிலாக நம்மை போன்ற மனிதர்களின் விதியை நிர்ணயிப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக் கூறி இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்..
|