பிறந்த நேரத்தை சரிபார்ப்பது அவசியமா??
ஒரு குழந்தையின் ஜாதகத்தை கணிக்க ஜோதிடர்களுக்கு தேவைபடுவது; அந்த குழந்தையின்.. பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய இம்மூன்றும் தான்..
முதலில் ஜாதகம் கணிப்பதில் ஒரு குழந்தை பிறந்த இடத்தின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்போம்.... ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரு பாவங்களில் பிரதான பாவமாக திகழும் லக்ன பாவம் என்பது இந்த சூரிய உதயத்தை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. சூரிய உதயம் என்பது இடத்திற்கு இடம் வேறுபடும். அதாவது பூமியின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையை (Latitudes and Longitudes) பொருத்து இந்த சூரிய உதயம் என்பது மாறுபடும். அதனால் தான் ஜாதகம் கணிதம் செய்யப்படும் பொழுது, ஒரு குழந்தை பிறந்த இடமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இன்று பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறக்கின்றன. அதற்காக ஜோதிடரிடம் மருத்துவமனையின் விலாசத்தை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்த மருத்துவமனை அமைந்துள்ள ஊரின் பெயரை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது. அந்த குறிப்பிட்ட ஊரின் அட்சரேகை தீர்க்கரேகையை கொண்டு சூரிய உதய நேரத்தை கண்டுபிடித்து விடலாம்.
ஒரு வேளை மருத்துவமனை அமைந்திருப்பது சிறிய கிராமமாக இருப்பின் அதற்கு அருகாமையில் உள்ள நகரத்தின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது. காரணம் பெரும்பாலும் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரம் வரை சூரிய உதயம் நேரம் என்பது மாறாது. ஆதலால் ஜாதகம் கணிப்பதற்கு தேவையான இந்த பிறந்த இடத்தில் பிழை வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
அடுத்ததாக ஒரு குழந்தை பிறந்த தேதி.... இந்த பிறந்த தேதி என்பது மருத்துவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியவேண்டியது என்பதில்லை. குழந்தை பிறந்த தினத்தன்று காலண்டரை பார்த்தாலே தெரிந்துவிட போகிறது. ஒரு வேளை குழந்தை நள்ளிரவு சமயங்களில் பிறப்பதாக இருப்பின் மருத்துவர்கள் குறிப்பிடும் நேரத்தைப் பொருத்து பிறந்த தேதியை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்ததே.. ஆனால் இது போன்று நிகழ்வதற்கான வாய்ப்பு (probability) குறைவு என்பதால் இந்த பிறந்த தேதியிலும் பெரும்பாலும் பிழை வருவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
அடுத்ததாக அந்த குழந்தையின் பிறந்த நேரம்.... இதில் தான் வில்லங்கமே வருகிறது. (Ideal place where error can happen) இங்கே தான் ஜோதிடர்களுக்கு சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் பிறந்த நேரத்தில் பிழை வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன.
காரணம்.. முதலில் எந்த நேரத்தை பிறந்த நேரமாக எடுத்துக் கொள்வது என்பதிலேயே சில ஜோதிடர்களிடமும் பொதுமக்களிடமும் கருத்தொற்றுமை என்பது இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். அதாவது ஒரு குழந்தையின் பிறந்த நேரம் என்பது ஒரு சிலர் தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் நேரம் என்றும்; இன்னும் சிலர் குழந்தை முதன் முதலில் அழுகின்ற நேரம் என்றும் மற்றவர்கள் தொப்புள் கொடியை வெட்டிய நேரம் தான் என்றும் கூறுகிறார்கள்....
ஒரு குழந்தையின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரத்தை தான் அந்த குழந்தையின் பிறந்த நேரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அடியேனின் கருத்தாகும். இதற்கான காரணத்தை பற்றி விளக்க நான் இங்கே கடமை பட்டுள்ளேன்..
அதாவது ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் வளர்கின்ற பொழுது; தொப்புள்கொடி வழியாக தான் சுவாசத்தையும், உணவையும் தாயிடமிருந்து பெறுகிறது. என்ன தான் குழந்தை தன் தாயின் கருவறையிலிருந்து வெளியேறினாலும் தொப்புள் கொடி துண்டிக்கப்படும் வரை தன் தாயின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
பிறகு தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட உடன் முதன் முதலாக அந்த குழந்தை தனது சுயமுயற்சியினால் இப்பிரபஞ்சத்தில் உள்ள காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அந்த வினாடியே நவகிரகங்களும் சேர்ந்து தன் கதீர்வீச்சுக்களின் (இருப்பிடத்தை பொருத்து வேறுபடும்) மூலமாக ஒரு காந்த புலத்தை (magnetic field) அந்த குழந்தையின் மேல் உருவாக்குகின்றது. இங்கே தான் எல்லாம் வல்ல இறைவன் நவகிரகங்களின் வாயிலாக அந்த குழந்தையின் விதியை நிர்ணயம் செய்கிறார்.
இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால்.. ஒரு குழந்தையின் தொப்புள் கொடியை துண்டிக்கப்பட்ட பிறகு தான், அந்த குழந்தையானது தனித்து ஓர் உயிராக இப்பிரபஞ்சத்தில் இயங்குகிறது.
ஆகவே ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தாலும் அல்லது அறுவை சிகிச்சை (சிசேரியன் முறை) மூலமாக பிறந்தாலும் அந்த குழந்தையின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட நேரத்தையே பிறந்த நேரமாக கருதப்பட வேண்டும்.
அடுத்ததாக.... ஒரு குழந்தையின் பிறந்த நேரத்தை குறிக்கும் பொழுது பெரும்பாலானோர் வினாடியை கருத்தில் கொள்வதில்லை. அவசியம் வினாடியையும் சேர்த்து குறிக்க வேண்டும். இதை படித்தவுடன் இப்பொழுது உங்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். இதற்கான காரணத்தை இப்பொழுது கூறுகிறேன்..
அதாவது கிரகங்கள் வான்மண்டலத்தில் நிமடத்திற்கு ஒரு முறை நகர்வதில்லை..!! ஒவ்வொரு நொடியும் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.. எனவே ஒரு குழந்தை பிறந்த நேரத்திற்குண்டான வினாடியையும் குறித்தால் தான் கிரக நிலைகளை மிகத் துல்லியமாக பெற முடியும். அப்பொழுது தான் ஜாதக கணிதமும், பலனும் துல்லியமாக வரும்.
உயர் கணித சார ஜோதிட முறைப்படி நுட்பமாக ஆய்வு செய்யும் பொழுது வெறும் 30 வினாடி இடைவெளிக்குள் விதி கொடுப்பினை மாறுவதை தெளிவாக உணர முடியும். அதுவே குறைந்த தசா வருடங்களை கொண்ட சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் பாவ உபநட்சத்திர அதிபதியாக வரும் பொழுது 15 வினாடி இடைவெளிக்குள் விதி கொடுப்பினை (ஜாதகம்) மாறினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..
இது போன்று சில வினாடிகளிலேயே விதி அமைப்பு (ஜாதகம்) மாறிவிடுவதால் பிறந்த நேரத்திற்குண்டான வினாடியை குறிக்காமல் விடுவதும் ஜாதகத்தில் ஒரு பிழையாக வந்து விடுகிறது.
அடுத்து, பொதுவாக நேரம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசப்படுகின்றது. ஏன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் நேரம் என்பது வேறுபடுகின்றது.. IST என்றால் Indian Standard Time என்று அர்த்தம். அதாவது நம் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் பொதுவான நேரம் தான் இது. ஆதலால் இந்தியாவில் பிறக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தை மையமாக கொண்டு தான் ஜாதகம் கணிதம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், இன்று நாம் அனைவரது வீட்டில் உள்ள சுவர்க்கடிகாரகங்களும், மருத்துவமனை மற்றும் அலுவலகங்களில் உள்ள சுவர்க்கடிகாரகங்களும், தனிநபர் பயன்படுத்தும் கைக்கடிகாரம் மற்றும் அலைபேசிகள் யாவும் ஒரு சேர அச்சு அசலாக வினாடி கூட மாறாமல் இந்த IST நேரத்தை தான் காட்டுகிறதா.. என்றால் அது கேள்விக்குறியே..!! காரணம் நடைமுறையில் இவைகளுக்குள் சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.
இதை நான் இங்கே கூறிய நோக்கம் என்னவெனில்; ஒரு குழந்தையின் பிறந்த நேரம் என்பது மருத்துவர்களின் வாயிலாக தான் நாம் அனைவருக்கும் தெரிய வருகிறது. அப்படியிருக்கையில் மருத்துவமனையில் உள்ள சுவர்கடிகாரங்களோ அல்ல மருத்துவர்கள் அணியும் கைக்கடிகாரமோ சிறிது தவறான நேரத்தை (variation when compared to IST) காட்டுவதாக இருப்பின், அவர் கூறும் பிறந்த நேரத்தில் பிழை வரத்தான் செய்யும்.
இதற்கு நாம் மருத்துவர்களை குறை கூற முடியாது. காரணம் இரண்டு உயிர்களை (தாய், சேய்) பத்திரமாக மீட்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்குமே தவிர ஜாதக கணிதம் செய்வதற்காக இந்த நேரம் குறிப்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.. ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பிழை ஏற்பட சில சமயங்களில் இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது..
அடுத்ததாக, என் அனுபவத்தில் பார்த்ததில்.. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளின் பிறந்த நேரத்தை குறிக்காமல் விட்டிருக்கிறார்கள். துன்பம் வரும் வேளையிலும், திருமண காலங்களின் போதும் எம்மை தொடர்பு கொண்டு அவர்களது வாரிசுகளின் பிறந்த நேரத்தை சிறிதளவு ஞாபகபடுத்தி தோராயமாக (அதாவது அரைமணி நேரமோ அல்ல கால மணி நேர இடைவெளியை கொண்டு) குறிப்பிட்டு எதிர்கால பலன் பற்றி கேட்கிறார்கள்..
இது போன்று இன்னும் பல காரணங்களினால் பொதுவாக இந்த பிறந்த நேரத்தில் பிழையோ அல்லது குழப்பமோ வருவது சகஜம் தான். அதை சரி பார்த்து திருத்தம் செய்வது ஒரு பொறுப்புள்ள ஜோதிடரின் முதற்கடமை ஆகும்.
ஒரு சில ஜோதிடர்கள்..
தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜாதகத்தை வாங்கிய பின்னர், அதில் குறிப்பிட்டிருக்கும் பிறந்த நேரம் சரிதானா!! என்று கூட சோதித்து பார்க்காமல் நேரிடையாக எதிர்கால பலன்களை சொல்லிவிடுகிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். ஜோதிடம் சில சமயங்களில் பொய்த்து போவதற்கு இதுவும் ஒரு காரணம்.
எனவே ஒரு ஜோதிடர், தங்கள் வாடிக்கையாளரிடம், அவரது எதிர்கால பலன்களை எடுத்துரைக்கும் முன்பு, அவர் பிறந்த நேரத்தை சரி தானா?? என்று ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கொண்டு முதலில் சோதித்து பார்ப்பது அவசியமானதாகும். ஒரு வேளை அவற்றில் ஏதேனும் தவறோ குழப்பமோ இருப்பின்; அதை திருத்தம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் பலன்கள் துல்லியமாக வரும்..
இப்பொழுது உங்கள் மனதில் ஒன்று தோன்றலாம்.. அதாவது இது போன்று வினாடிக்கணக்கில் நேரத்தை குறிப்பது அவசியம்.. என இதுவரை எங்கும் கேள்விப்பட்டதில்லையே..!! அப்படியே இருந்தாலும் இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்று....!!!!
அதற்கான பதில்..
பிறந்த நேரத்தை வினாடியோடு குறிப்பது நடைமுறையில் சற்று கடினம் தான்..
ஆனால் அதே சமயம் வினாடிக்கணக்கில் துல்லியமாக பார்க்கப்படும் இந்த உயர் கணித சார ஜோதிட முறையில் ஆளும் கிரகங்களின் (தெய்வ அனுகிரகம்) உதவியோடு பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கி ஒருவரின் உண்மையான பிறந்த நேரத்தை (actual birth time) வினாடிகணக்கில் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்....
|